பரளிக்காடு சூழல் சுற்றுலா வரவேற்பு – 4 நாட்களில் 750 பேர் பங்கேற்பு

0
3

பரளிக்காடு பகுதியில் நடைபெறும் சூழல் சுற்றுலா திட்டத்திற்கு கோடை விடுமுறையை முன்னிட்டு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. காரமடை வனச்சரகத்திற்கு உட்பட்ட இந்த இயற்கை வளமிக்க பகுதி, மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் பில்லூர் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.

காரமடை வனத்துறை சார்பில், பழங்குடியின மக்களின் பங்களிப்புடன் நடத்தப்படும் இந்த சுற்றுலா திட்டம், சுற்றுலாப் பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது. பில்லூர் அணையில் பரிசல் பயணம், அத்திக்கடவு ஆற்றில் மூலிகை குளியல், வனப்பகுதியில் நடைப்பயணம், பழங்குடியினர் பாரம்பரிய நடனம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகள் இதில் இடம்பெற்றுள்ளன. மேலும், 10க்கும் மேற்பட்ட பாரம்பரிய உணவுகள் வழங்கப்படுவது கூடுதல் சிறப்பாகும்.

கோடை வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் இயற்கை சூழல்களை நாடி வருவதால் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து, மே 1 முதல் 31ஆம் தேதி வரை தினமும் இந்த சூழல் சுற்றுலாவை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வனச்சரகர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்ததாவது: “பள்ளி, கல்லூரி கோடை விடுமுறை காரணமாக சுற்றுலாப் பயணிகள் அதிகரித்து வருகின்றனர். கடந்த 4 நாட்களில் தினமும் சுமார் 250 பேர் என மொத்தம் 750 பேர் பங்கேற்றுள்ளனர்” என்றார்.

சுற்றுலாவில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைனில் முன்பதிவு செய்து செல்ல வேண்டும். பெரியவர்களுக்கு ₹700 மற்றும் 14 வயதுக்குட்பட்டவர்களுக்கு ₹600 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம், பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பையும் உருவாக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.