செங்கல்பட்டு: 500 மருந்து கடைகள் மூடல்: ஆன்லைன் விற்பனைக்கு எதிர்ப்பு

0
2

நாடு முழுவதும் ஆன்லைன் மருந்து விற்பனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அகில இந்திய மருந்தக உரிமையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கத்தின் அழைப்பின் பேரில் இன்று ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்தப் போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 12.4 லட்சம் மருந்தக உரிமையாளர்கள் பங்கேற்றுள்ளனர்.

ஆன்லைன் மூலம் மருந்துகள் விற்பனை செய்யப்படுவது மருந்தகங்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், இளம் தலைமுறையினரின் உடல்நலத்திற்கும் ஆபத்தை ஏற்படுத்துவதாக சங்கங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. குறிப்பாக வலி நிவாரணி மற்றும் தூக்க மாத்திரைகள் எளிதில் கிடைப்பதால் இளைஞர்கள் அதற்கு அடிமையாகும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும், ஆன்லைன் மருந்து விற்பனையில் போலி மருந்துகள் அதிகரித்து வருவதாகவும், உயிர்காக்கும் மருந்துகளில் முறையற்ற லாப சதவீதங்கள் மற்றும் அதிக தள்ளுபடிகள் வழங்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வாங்கப்படும் கருக்கலைப்பு மருந்துகளால் உயிரிழப்புகள் மற்றும் சமூக சீரழிவு ஏற்படுவதாகவும் வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து மின்மருந்தக செயல்பாடுகள் தொடர்பான அரசாணைகளை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் இந்த வேலைநிறுத்தம் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் உரிமம் பெற்ற 42 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்து கடைகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன. சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுமார் 5 ஆயிரம் மருந்தகங்களும் இன்று அடைக்கப்பட்டுள்ளன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் மூடப்பட்டுள்ளன. மருத்துவமனைகளுடன் இணைந்துள்ள மருந்தகங்கள் மட்டுமே செயல்பட்டு வருகின்றன. இதனால் மாத்திரைகள் வாங்க வந்த பொதுமக்கள் கடைகள் மூடப்பட்டிருப்பதால் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

அதே நேரத்தில், அவசர கால மருந்து சேவை பாதிக்கப்படாமல் இருக்க தமிழ்நாடு மருந்து கட்டுப்பாடு இயக்கம் சார்பில் உதவி ஆய்வாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அவசர தேவைக்காக அவர்களை தொடர்புகொண்டு மருந்துகளை பெறலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளில் இயங்கும் மருந்தகங்கள் வழக்கம்போல் செயல்பட்டு வருகின்றன.