Home செங்கல்பட்டு தாம்பரம் அருகே கார் விற்பதாக ரூ.14.5 லட்சம் மோசடி; பெங்களூரு நபர் கைது

தாம்பரம் அருகே கார் விற்பதாக ரூ.14.5 லட்சம் மோசடி; பெங்களூரு நபர் கைது

0

தாம்பரம் அருகே மேடவாக்கத்தைச் சேர்ந்த சதீஷ் என்பவர், கார் வாங்கும் நோக்கில் பழைய கார்கள் விற்பனை செய்யப்படும் ஆன்லைன் தளமான OLX-ல் தேடியுள்ளார். அப்போது, குறைந்த விலையில் விற்பனைக்கு இருந்த ஒரு காரை பார்த்து ஆர்வம் கொண்ட அவர், அதில் கொடுக்கப்பட்டிருந்த தொடர்பு எண்ணுக்கு அழைத்துள்ளார்.

அந்த எண்ணில் பேசிய நபர், காரை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக கூறி, அதற்காக ரூ.14.50 லட்சம் தொகையை முன்பணம் மற்றும் முழுத் தொகையாக அனுப்புமாறு கேட்டுள்ளார். காரை விரைவில் ஒப்படைப்பதாக நம்ப வைத்ததால், சதீஷ் அந்த நபர் கொடுத்திருந்த வங்கி கணக்கிற்கு பல கட்டங்களாக பணத்தை அனுப்பியுள்ளார்.

பணம் அனுப்பிய பிறகு, காரை பெறுவதற்காக சதீஷ் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது, அந்த நபரின் மொபைல் எண் அணைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து பலமுறை முயன்றும் எந்த பதிலும் கிடைக்காததால், தான் மோசடிக்கு ஆளாகியிருப்பதை உணர்ந்த சதீஷ், தாம்பரம் போலீஸ் கமிஷனரகத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து, தாம்பரம் இணையவழி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். வங்கி பரிவர்த்தனை விவரங்கள் மற்றும் தொலைத்தொடர்பு நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டது.

அதில், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த ராஜேஷ் (40) என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் பெங்களூரு சென்று ராஜேஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இணையதளங்களில் பொருட்கள் வாங்கும் போது பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version