பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு செய்தது, “இது நீதித்துறையின் கருப்பு நாள் என்று எம்பி சுதா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து விடுதலையான பேரறிவாளன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பதிவு செய்துள்ளதற்கு காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினரும், வழக்கறிஞருமான சுதா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் நடைபெற்ற ஏப்ரல் 27-ஆம் தேதியை இந்திய அரசியலமைப்பின் ‘கருப்பு நாள்’ என்று அவர் விமர்சித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுதா எம்பி பேசியதாவது: “முன்னாள் பாரதப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு தண்டனை பெற்ற ஒருவர் வழக்கறிஞராகப் பதிவு செய்திருப்பது நீதித்துறைக்கே இழிவானது. தற்போது பார் கவுன்சில் தேர்தல் நடைபெற்றுள்ள சூழலில், புதிய வழக்கறிஞர்களைப் பதிவு செய்ய உறுப்பினர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அப்படி இருக்கும்போது, பேரறிவாளனுக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது? இதற்குப் பின்னணியில் உள்ள பார் கவுன்சில் உறுப்பினர்கள் மீது முறையான விசாரணை நடத்தி கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.”
“இந்த நிலை நீடித்தால், தீவிரவாதிகளும் குற்றவாளிகளும் மிக எளிதாக வழக்கறிஞர் என்ற போர்வையில் நீதித்துறைக்குள் ஊடுருவ முடியும். இது சமூக பாதுகாப்பிற்கும், சட்டத்தின் மாண்பிற்கும் மிகப்பெரிய அச்சுறுத்தல். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகவும், 15 ஆண்டுகளாக வழக்கறிஞராகப் பணியாற்றி வருபவள் என்ற முறையிலும் இதனை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். வழக்கறிஞர்கள் என்ற கவசத்தைப் பயன்படுத்தித் தீவிரவாதிகள் உள்ளே நுழைவதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்,” என அவர் ஆவேசமாகத் தெரிவித்தார்.
பேரறிவாளனின் வழக்கறிஞர் பதிவை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, தமிழக ஆளுநர் மற்றும் தமிழக முதலமைச்சர் ஆகியோருக்குக் கடிதம் அனுப்பியுள்ளதாக சுதா எம்பி தெரிவித்தார். சட்டத்தின் ஓட்டைகளைப் பயன்படுத்தி இது போன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவரது பிரதான கோரிக்கையாக உள்ளது. இந்த விவகாரம் தற்போது வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.





