பயனற்று கிடக்கும் புதிய நிழற்குடை: வரிப்பணம் வீண்

0
5

மதுராந்தகம் அருகே மொறப்பாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி பகுதியில் புதிதாக கட்டப்பட்ட பயணியர் நிழற்குடை பயன்பாடின்றி கிடப்பதால், மக்கள் வரிப்பணம் வீணாகி வருவதாக பொதுமக்கள் மற்றும் பயணியர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

உத்திரமேரூர் – மதுராந்தகம் மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மொறப்பாக்கம் ஊராட்சியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளி நுழைவாயிலின் இடதுபுறத்தில், கடந்த 2020-21ஆம் ஆண்டில் முன்னாள் மதுராந்தகம் திமுக எம்.எல்.ஏ புகழேந்தியின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிய பயணியர் நிழற்குடை கட்டப்பட்டது.

ஆனால், அதே பள்ளி நுழைவாயிலின் வலதுபுறத்தில் ஏற்கனவே பழைய பேருந்து நிறுத்த நிழற்குடை இருந்து வருகிறது. இதனால் ஒரே பகுதியில் அருகருகே இரண்டு நிழற்குடைகள் அமைந்துள்ளதால், பேருந்து பயணிகள் குழப்பமடைகின்றனர்.

இந்நிலையில், அரசு மற்றும் தனியார் பேருந்துகள் தொடர்ந்து பழைய நிழற்குடை அருகிலேயே நின்று பயணிகளை ஏற்றி இறக்கிச் செல்கின்றன. இதனால் புதியதாக கட்டப்பட்ட நிழற்குடை முறையாக பயன்பாட்டிற்கு வராமல் காலியாக கிடக்கிறது.

மேலும், அந்த இடம் தற்போது மது அருந்துவோரின் கூடாரமாக மாறியுள்ளதாகவும், சுற்றுப்புறத்தில் குப்பைகள் கொட்டப்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நிழற்குடையின் இருக்கைகளும் உடைந்து சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன.

முறையான திட்டமிடல் இல்லாமல் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டதால், பொதுமக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது என்றும், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பயணியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.