ஐபிஎல் 2026 சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களின் ஒரே கேள்வி, “தோனி எப்போது களம் இறங்குவார்?” என்பதுதான். இந்தச் சீசனில் சிஎஸ்கே இதுவரை 6 ஆட்டங்களில் விளையாடியுள்ள போதிலும், காயம் காரணமாக எம்.எஸ்.தோனி இன்னும் ஒரு போட்டியில் கூடப் பங்கேற்கவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில், அணியின் பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி முக்கிய தகவலைப் பகிர்ந்துள்ளார்.
தோனியின் உடல்நிலை குறித்துப் பேசிய மைக் ஹஸ்ஸி, அவர் காயத்திலிருந்து மிக வேகமாகக் குணமடைந்து வருவதாகத் தெரிவித்தார். “நேற்று முன்தினம் நடைபெற்ற வலைப்பயிற்சியின் போது தோனி பேட்டிங் செய்தார். பந்துகளை அவர் எதிர்கொண்ட விதம் மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் பழைய வேகத்தில் பேட்டிங் செய்வதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது” என ஹஸ்ஸி குறிப்பிட்டார்.
பேட்டிங் மட்டுமின்றி, களத்தில் ஓடும் திறனைச் சோதிக்கவும் தோனி பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். ஆட்டத்தின் இறுதியில் பேட்டிங் செய்யும்போது, இரண்டு ரன்கள் எடுப்பதற்கான வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ள தோனி தீவிரமாக ஓடிப் பயிற்சி எடுத்து வருகிறார்தனது ஓடும் திறனில் முழு நம்பிக்கையைப் பெற வேண்டும் என்பதற்காகவே அவர் தற்போது இந்தச் சிறப்புப் பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
தோனி மீண்டும் அணிக்குத் திரும்பும் தேதி குறித்து ஹஸ்ஸிக்குத் துல்லியமான தகவல் தெரியவில்லை என்றாலும், அவர் நம்பிக்கையுடன் பேசியுள்ளார். “அவர் எப்போது விளையாடுவார் என்று தெரியவில்லை, ஆனால் ரசிகர்களைப் போலவே நானும் அவர் கூடிய விரைவில் களம் திரும்புவார் என்று நம்புகிறேன்” என ஹஸ்ஸி தெரிவித்தார்.
சிஎஸ்கே அணி தனது கடந்த ஆட்டத்தில் ஹைதராபாத்திடம் தோல்வியைத் தழுவிய நிலையில், தோனியின் வருகை அணிக்குத் தார்மீக ரீதியாகப் பெரும் பலத்தைக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 6 போட்டிகள் முடிந்த நிலையில், மீதமுள்ள லீக் போட்டிகளில் தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்களைக் காண ரசிகர்கள் இமைக்காமல் காத்திருக்கின்றனர்.
