Home Politics சர்ச்சைக்குள்ளான விஜய்யின் ‘சர்ச்’ வழிபாடு: தேர்தல் விதிமீறல் புகாரில் சிக்கிய தவெக தலைவர்!

சர்ச்சைக்குள்ளான விஜய்யின் ‘சர்ச்’ வழிபாடு: தேர்தல் விதிமீறல் புகாரில் சிக்கிய தவெக தலைவர்!

0

பெரம்பலூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இன்று திருச்சியில் மேற்கொண்ட பிரச்சாரப் பயணம் எதிர்பாராத சட்டச் சிக்கலில் முடிந்துள்ளது. வழிபாட்டுத் தலங்களுக்குள் கட்சி அடையாளத்துடன் சென்றது தேர்தல் நடத்தை விதிமீறல் என அவர் மீது புகார் எழுந்துள்ளது.

இன்றைய பிரச்சாரத்தின் போது அனைத்துத் தரப்பு மக்களின் ஆதரவைப் பெறும் நோக்கில் விஜய் முக்கிய வழிபாட்டுத் தலங்களுக்குச் சென்றார். முதலில் அம்மன் கோயிலுக்கும், பிறகு பள்ளிவாசலுக்கும் சென்ற விஜய், அங்குத் தனது கட்சிச் சின்னம் அல்லது கொடி பொறித்த அடையாளங்கள் எதையும் அணியவில்லை. ஒரு சாதாரண மனிதராகச் சென்று அமைதியான முறையில் வழிபாடு நடத்தித் திரும்பினார். ஆனால், மாலையில் ஒரு சர்ச்சிற்குச் சென்றபோது நிலைமை மாறியது. விஜய் உள்ளே நுழைந்ததும் சர்ச்சின் கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டன. அங்கே அவர் முட்டி போட்டு உருக்கமாகப் பிரார்த்தனை செய்த வீடியோ இணையத்தில் வெளியானது. அந்த வீடியோவில், விஜய்யின் கழுத்தில் அவரது கட்சியின் சின்னம் பொறித்த துண்டு (Party Scarf) பளிச்செனத் தெரிந்தது.

தேர்தல் ஆணையத்தின் விதிகளின்படி, வழிபாட்டுத் தலங்களை அரசியல் பிரச்சாரத்திற்கோ அல்லது கட்சிச் சின்னங்களைக் காட்சிப்படுத்தவோ பயன்படுத்தக் கூடாது. கோயில் மற்றும் பள்ளிவாசலில் கட்சித் துண்டு இல்லாமல் சென்றவர், சர்ச்சிற்குள் மட்டும் கட்சி அடையாளத்துடன் சென்றது ஏன்? இது திட்டமிட்டுச் செய்யப்பட்ட விதிமீறலா?” என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

கடந்த வாரம் மதுரையில் அதிமுக சின்னம் பொறித்த துண்டுடன் சர்ச்சிற்குள் சென்று வாக்கு சேகரித்த வேட்பாளர் சுந்தர் சி மீது தேர்தல் ஆணையம் வழக்குப் பதிவு செய்ததைச் சுட்டிக்காட்டும் சமூக ஆர்வலர்கள், விஜய் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இது குறித்து தவெக தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கம் அளிக்கப்படவில்லை என்றாலும், ஆதரவாளர்கள் இது தற்செயலாக நடந்திருக்கலாம் எனத் தெரிவித்து வருகின்றனர். இருப்பினும், தேர்தல் நடத்தை விதிகள் தீவிரமாக அமலில் உள்ள நிலையில், திருச்சியின் தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை இந்த விவகாரத்தை எப்படிக் கையாளப் போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version