Home Trending/Viral Trending ரஜினியுடன் நடிக்கும் மேக்னா ராஜ்! கணவர் சிரஞ்சீவி சர்ஜாவின் கனவை நனவாக்கிய நெகிழ்ச்சிப் பதிவு!

ரஜினியுடன் நடிக்கும் மேக்னா ராஜ்! கணவர் சிரஞ்சீவி சர்ஜாவின் கனவை நனவாக்கிய நெகிழ்ச்சிப் பதிவு!

0

மறைந்த கன்னட நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவின் தீராத ஆசையை, அவரது மனைவியும் நடிகையுமான மேக்னா ராஜ் நிறைவேற்றியுள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து நடிப்பதன் மூலம், தனது கணவரின் நீண்ட நாள் கனவை நனவாக்கியுள்ளதாக அவர் உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

கன்னடத் திரையுலகின் முன்னணி நடிகராக இருந்த சிரஞ்சீவி சர்ஜா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் தீவிர ரசிகராகத் திகழ்ந்தார். ரஜினிகாந்துடன் ஒரு முறையாவது இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதே சிரஞ்சீவி சர்ஜாவின் மிகப்பெரிய லட்சியமாக இருந்தது.

கடந்த 2020-ஆம் ஆண்டு அவர் எதிர்பாராத விதமாக மறைந்ததால், அந்தக் கனவு நிறைவேறாமலேயே போனது.
மே 2-ஆம் தேதி தனது 8-வது திருமண நாளையொட்டி, மேக்னா ராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிக உருக்கமான செய்தி ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

இந்த ஆண்டுத் திருமண நாள் வெறும் தேதியல்ல, அது ஒரு உணர்வு என்று பதிவிட்டுள்ள அவர், ரஜினிகாந்தை ஒரு கடவுளாகவே தனது கணவர் பார்த்ததாகக் குறிப்பிட்டுள்ளார். தான் கனவிலும் நினைக்காத வகையில் ரஜினி சாருடன் நடிக்கத் தனது கணவரே வழிவகை செய்துள்ளதாகவும், இந்த மைல்கல் அனைத்தும் அவருக்கே சொந்தம் என்றும் மேக்னா ராஜ் பதிவிட்டுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ஜெயிலர் 2’ திரைப்படத்தில் மேக்னா ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்தப் படத்தின் மூலம் தனது கணவரின் லட்சியத்தை அவர் நனவாக்கவுள்ளது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version