Home Trending/Viral Trending ஐபிஎல் போட்டி தாமதம்: அம்பயருக்கு அபராதம்?

ஐபிஎல் போட்டி தாமதம்: அம்பயருக்கு அபராதம்?

0

ஐபிஎல் 2026 தொடரில் போட்டிகள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை மீறி நீடிப்பது குறித்து கவலை அதிகரித்து வருகிறது. இதுவரை நடைபெற்ற பல போட்டிகள் திட்டமிட்ட நேரத்தை விட அதிகமாக நீண்டுள்ளன. தற்போதைய விதிகளின்படி ஓவர் ரேட் குறைவாக இருந்தால் அணியின் கேப்டன்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால், இந்த முறையில் மாற்றம் தேவை என மெர்ல்போன் கிரிக்கெட் கிளப்பின் (MCC) கிரிக்கெட் குழுத் தலைவர் பிரேசர் ஸ்டீவர்ட் பரிந்துரை செய்துள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – மும்பை இந்தியன்ஸ் போட்டி 4 மணி நேரம் 22 நிமிடங்களாக நீடித்ததை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு டி20 போட்டி இவ்வளவு நேரம் நீடிப்பது விளையாட்டின் சுவாரஸ்யத்தை குறைக்கும் என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

ஆட்டத்தை சரியான வேகத்தில் நடத்துவது அம்பயர்களின் பொறுப்பு என்றும், அவர்கள் இடைவேளைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் ஸ்டீவர்ட் கூறினார். “அம்பயர்கள் தங்கள் அதிகாரத்தை பயன்படுத்தாமல் மெத்தனமாக இருக்கிறார்கள். இதனால் ஆட்டம் தாமதமாகிறது. அம்பயர்களுக்கு அபராதம் விதித்தால் மட்டுமே அவர்கள் நேரத்தை கடைப்பிடிப்பதில் தீவிரம் காட்டுவார்கள்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இங்கிலாந்தின் ‘தி ஹண்ட்ரெட்’ தொடரில் கடைப்பிடிக்கப்படும் கடுமையான நேர கட்டுப்பாடுகளை எடுத்துக்காட்டாக கூறிய அவர், அதுபோன்ற விதிகளை ஐபிஎல் போட்டிகளிலும் அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார். தற்போதுள்ள நடைமுறையை மாற்றி, அம்பயர்களை பொறுப்பாக்கினால் போட்டிகள் மேலும் விறுவிறுப்பாகவும் சுருக்கமாகவும் அமையும் என அவர் பிசிசிஐக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version