தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், செங்கல்பட்டு சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து, அவர் வீதி வீதியாகச் சென்று பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறார்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் திமுக, அதிமுக, நாம் தமிழர், தவெக, என கட்சிகள் தங்கள் கூட்டணி கட்சியினருடன் ஓட்டு வேட்டையாடி வருகின்றனர். காட்டாங்குளத்தூர் மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட சிங்கப்பெருமாள் கோவில், திருத்தேரி, பாரேரி, கொண்டமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற பிரச்சாரம் பெரும் வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சிங்கப்பெருமாள் கோவில் பகுதியில் வேட்பாளர் வருகை தந்தபோது, ஆதரவாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் அவரை வரவேற்றனர். சுமார் 15 அடி உயரமுள்ள பிரம்மாண்ட மாலை கிரேன் உதவியுடன் அணிவிக்கப்பட்டது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது.
பிரச்சாரத்தின் போது பாரம்பரிய முறையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. வெற்றியின் அடையாளமாக வீர வாள் வழங்கப்பட்டதுடன், தேர்தலில் வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜைகளும் நடத்தப்பட்டன. அதனைத் தொடர்ந்து வீர வேல் வழங்கி வேட்பாளரை கௌரவித்தனர். இந்த நிகழ்வுகள், பிரச்சாரத்திற்கு ஒரு விழாக்கோலத்தை ஏற்படுத்தின.
மேலும், வழிநெடுகிலும் திரண்டிருந்த நூற்றுக்கணக்கான பெண்கள் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து மலர் தூவி தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். தாரை தப்பட்டை, செண்டை மேளம், பேண்ட் வாத்தியம் போன்ற இசைக்கருவிகளின் முழக்கத்தில் அந்தப் பகுதி முழுவதும் திருவிழா சூழல் நிலவியது.
கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பங்கேற்ற இந்த பிரச்சாரத்தில், நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்று வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. பொதுமக்களிடம் தமிழக அரசின் சாதனைகள் குறித்து விளக்கி, தொகுதியின் வளர்ச்சிக்கான திட்டங்களை முன்வைத்து கார்த்திக் தண்டபாணி ஆதரவை கோரினார்.
மொத்தத்தில், செங்கல்பட்டு தொகுதியில் திமுக வேட்பாளரின் பிரச்சாரம் கிரேன் மூலம் மாலை அணிவிக்கப்பட்டதால் சமூக வலைதளங்களில் டிரென்டாகி வருகிறது. தொண்டர்களும் அதிக உற்சாகத்துடன் வாக்கு வேட்டை நடத்தி வருகின்றனர்.
