செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு அதிகரித்து வருவதாகவும், உள்ளூர் நீர் ஆதாரங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் பொதுமக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருவதாகவும் திமுக கவுன்சிலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் உருவாக்கப்பட்ட மறைமலைநகர் நகராட்சி தற்போது சிறப்பு நிலை நகராட்சியாக செயல்பட்டு வருகிறது. 16 வருவாய் கிராமங்கள் மற்றும் 21 வார்டுகளை கொண்ட இந்த நகராட்சியில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளில் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், குடிநீர் தேவையும் உயர்ந்துள்ளது.
நகராட்சியின் 6 வார்டுகளுக்கு கூடுவாஞ்சேரி–பாலாறு கூட்டு குடிநீர் திட்டம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. மீதமுள்ள 15 வார்டுகளுக்கு பொதுக் கிணறுகள், ஆழ்துளைக் கிணறுகள் மற்றும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
ஆனால், கோடை வெயிலின் தாக்கத்தால் பல நீர் ஆதாரங்கள் வறண்டு போயுள்ளதாகவும், புதிய ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்காக டெண்டர் விடப்பட்டிருந்தும் பணிகள் தொடங்கப்படவில்லை என்றும் திமுக கவுன்சிலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவையில் உள்ள பணம் வழங்கப்படாததால் பல பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், குடிநீர் விநியோக பணியாளர்களுக்கு சம்பளம் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். பராசக்தி நகர், திருக்கச்சூர் ஈஸ்வரன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களும் பழுதடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் பல பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே டேங்கர் லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்படுவதாகவும், நிரந்தர தீர்வு காண நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் நாராயணன் விளக்கமளிக்கையில், குடிநீர் தொடர்பான புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், விதிமுறைகளுக்கு முரணாக இருந்த 505 வளர்ச்சி திட்ட டெண்டர்கள் ரத்து செய்யப்பட்டதால் சிலருக்கு ஏற்பட்ட அதிருப்தியே இந்த குற்றச்சாட்டுகளுக்கு காரணமாக இருக்கலாம் என்றும் கூறினார்.
