செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஏற்பட்ட கோர விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மறைமலைநகர் சாலை சந்திப்பில் பொதுமக்கள் சாலையைக் கடப்பதற்காக சிக்னலில் நின்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையிலிருந்து திருச்சி நோக்கி இரும்பு சென்ட்ரிங் பலகைகளை ஏற்றிக்கொண்டு டாடா ஏசி வாகனம் ஒன்று அதிவேகமாக வந்ததாக கூறப்படுகிறது.
சந்திப்பில் இருந்த சிக்னலை கவனிக்காமல் வந்த ஓட்டுநர் திடீரென பிரேக் பிடித்ததால் வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அங்கு நின்றிருந்த பொதுமக்கள் மீது மோதி குப்புற கவிழ்ந்தது. இதன் காரணமாக வாகனத்தில் இருந்த கனரக இரும்பு சென்ட்ரிங் பலகைகள் அனைத்தும், அங்கு நின்றிருந்த பாதசாரிகள் மீது சரிந்தன.
இந்த விபத்தில் திருக்கழுக்குன்றம் பகுதியைச் சேர்ந்த வைத்தியலிங்கம் (52) என்பவர் இரும்பு பலகைகளின் அடியில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில், அங்கிருந்தவர்கள் அவர்களை மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், விரைந்து சென்று உயிரிழந்தவரின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் வாகன ஓட்டுநர் சக்திவேலை கைது செய்த போலீசார், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக வந்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட இந்த விபத்து, அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
