Home செங்கல்பட்டு மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலை எதிர்த்து அதிமுக ஆர்ப்பாட்டம்

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேலை எதிர்த்து அதிமுக ஆர்ப்பாட்டம்

0

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்திய வகையில், அதிமுக எம்எல்ஏ மரகதம் குமரவேல் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்து தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மதுராந்தகம் நகர அதிமுக சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சி கிழக்கு மாவட்ட செயலாளர் ஆறுமுகம் தலைமையேற்றார். இதில் ஏராளமான அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு மரகதம் குமரவேலின் நடவடிக்கைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

அதிமுக சார்பில் வெற்றி பெற்று மக்களின் வாக்கால் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவர் திடீரென கட்சி மாறி தவெகவில் இணைந்தது மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர். மேலும், மக்களின் நம்பிக்கையை துரோகம் செய்துள்ளதாக குற்றம்சாட்டி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சமீபத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவாக வாக்களித்த மரகதம் குமரவேல், பின்னர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்து அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் தவெகவில் இணைந்தது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மதுராந்தகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம் அப்பகுதியில் அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது. போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நிலைமையை கண்காணித்தனர்.

NO COMMENTS

Exit mobile version