Mahabalipuram கடற்கரையில் பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள், குறிப்பாக குழந்தைகள் ஆபத்தான முறையில் கடலில் இறங்கி குளிப்பதால் அசம்பாவிதங்கள் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலமாக விளங்கும் மாமல்லபுரத்திற்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். பல்லவ மன்னர்கள் காலத்து புராதன சிற்பங்கள், கடற்கரை மற்றும் தலசயன பெருமாள் கோயில் உள்ளிட்ட இடங்களை பார்வையிட்ட பின் பலர் கடற்கரையில் பாதுகாப்பு உபகரணங்கள் இன்றி கடலில் இறங்கி குளித்து வருகின்றனர்.
இதனால் ராட்சத அலை மற்றும் கடல்நீரின் வேகமான இழுப்பில் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 50க்கும் மேற்பட்டோர் கடலில் மூழ்கி உயிரிழந்ததாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கோடை விடுமுறை காரணமாக தற்போது பல்வேறு மாவட்டங்களில் இருந்து குடும்பத்துடன் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் மாமல்லபுரத்திற்கு வருவதால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எச்சரிக்கையின்றி கடலில் இறங்கி விளையாடுகின்றனர்.
உயிரிழப்புகளை தடுக்க கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிர் காப்பாளராக நியமிக்கப்பட்ட கிருஷ்ணராஜ் பலரின் உயிரை காப்பாற்றி வருகிறார். இருப்பினும் அவருக்கு போதிய பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதனால் கடற்கரையில் நிரந்தர தடுப்பு வேலி, எச்சரிக்கை பலகைகள், கடலோர காவல்படை ரோந்து மற்றும் கூடுதல் உயிர்காப்பாளர்கள் நியமிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் குழந்தைகள் கடலில் இறங்கி குளிப்பதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
