Home செங்கல்பட்டு மதுராந்தகம்: திரௌபதி அம்மன் கோவில் துரியோதனன் படுகள விழா: தத்ரூப நாடகம் பக்தர்களை நெகிழ்ச்சி…

மதுராந்தகம்: திரௌபதி அம்மன் கோவில் துரியோதனன் படுகள விழா: தத்ரூப நாடகம் பக்தர்களை நெகிழ்ச்சி…

0

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த கிளியாநகர் கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் அக்னி வசந்த மகாபாரத பெருவிழாவின் ஒரு பகுதியாக, துரியோதனன் படுகள நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டு வந்து சாமி தரிசனம் செய்தனர்.

கடந்த மாதம் 7ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்த பெருவிழா தொடர்ந்து பல்வேறு ஆன்மிக மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளுடன் நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி தினமும் மகாபாரத சொற்பொழிவுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல், தெருக்கூத்து நாடக சபா சார்பில் மகாபாரதத்தை மையமாகக் கொண்ட நாடகங்களும் தினமும் அரங்கேறி வருகின்றன.

இதுவரை திரௌபதி கல்யாணம், அர்ஜுனன் தபசு, கர்ண மோட்சம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில், இறுதி நாளின் முக்கிய நிகழ்வாக துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பகவான் கிருஷ்ணர், பீமன் மற்றும் துரியோதனன் வேடமிட்ட நாடகக் கலைஞர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டினர்.

குறிப்பாக, பீமன் துரியோதனனை வீழ்த்தும் காட்சி மற்றும் அதன் பின் திரௌபதி தனது கூந்தலை முடிக்கும் நிகழ்வு பக்தர்களை உணர்ச்சிவசப்படுத்தியது. பாரம்பரிய இசை மற்றும் நாடக வடிவத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி, மகாபாரதத்தின் முக்கிய தருணங்களை நினைவூட்டும் வகையில் அமைந்தது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கிராம மக்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

NO COMMENTS

Exit mobile version