சிங்கபெருமாள் கோவில் அருகே உள்ள குண்ணவாக்கம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பயன்பாடின்றி பாழடைந்து கிடக்கும் சமுதாய நலக்கூடத்தை உடனடியாக புதுப்பித்து மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட குண்ணவாக்கம் ஊராட்சியில் குண்ணவாக்கம், அனுமந்தை உள்ளிட்ட பகுதிகளில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் சமூக மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளுக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பில் குண்ணவாக்கம் பிரதான சாலையில் சமுதாய நலக்கூடம் கட்டப்பட்டது.
இந்த நலக்கூடத்தை அப்பகுதி மக்கள் திருமணம், காதணி விழா, பிறந்தநாள் விழா உள்ளிட்ட பல்வேறு சுப நிகழ்ச்சிகளுக்காக பயன்படுத்தி வந்தனர். ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறி நலக்கூடம் மூடப்பட்டது. அதன் பின்னர் இதுவரை எந்த பணிகளும் மேற்கொள்ளப்படாமல் கட்டிடம் சேதமடைந்து பாழடைந்த நிலையில் காணப்படுகிறது.
இதனால் கிராம மக்கள் சிறிய குடும்ப நிகழ்ச்சிகளுக்குக் கூட சிங்கபெருமாள் கோவில், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தனியார் திருமண மண்டபங்களை அதிக செலவில் வாடகைக்கு எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், அதிக வருவாய் கொண்ட ஊராட்சியாக இருந்தும் சமுதாய நலக்கூடம் பராமரிக்கப்படாமல் இருப்பது அதிகாரிகளின் அலட்சியமாகும் என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆய்வு செய்து, பாழடைந்த சமுதாய நலக்கூடத்தை புதுப்பித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.





