செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூரில் அமைந்துள்ள திருநாகேஸ்வரர் கோயில் சித்திரை பிரமோற்சவ விழாவை முன்னிட்டு தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. 10 நாட்கள் நடைபெறும் இந்த விழா, கடந்த 22ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 7ஆம் நாள் முக்கிய நிகழ்வாக மகாரத தேரோட்டம் நேற்று நடைபெற்றது.
அதிகாலை கோயில் நடை திறக்கப்பட்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. பின்னர், அலங்கரிக்கப்பட்ட தேரில் இறைவன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர்.
‘ஓம் நமசிவாய’ என முழக்கமிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை இழுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றனர். பக்தர்களுக்காக தண்ணீர், மோர், அன்னதானம் போன்ற வசதிகள் செய்யப்பட்டிருந்தன. பாதுகாப்பிற்காக போலீசார் கண்காணிப்பு மேற்கொண்டனர்.





