தமிழகத்தில் தற்போதைய தவெக நல்லரசின் ஆட்சியில் சட்டம் ஒழுங்கு நிலைமையானது கடந்த திமுக ஆட்சியைவிட 150 சதவீதம் அதிகமாகக் கெட்டுவிட்டது; ஆனால், முதலமைச்சர் ச. ஜோசப் விஜயோ தனது ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்காக மற்ற கட்சிகளில் இருந்து ஆட்களை இழுப்பதில் மட்டுமே முழு கவனத்தைச் செலுத்தி வருகிறார்” என்று பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம், அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்து அனல் பறக்கும் அரசியல் விமர்சனங்களை முன்வைத்தார்.
செய்தியாளர்கள் சந்திப்பில் கே.பி.ராமலிங்கம் பேசுகையில், “தமிழக முதலமைச்சர் விஜய் டெல்லிக்குச் சென்று பிரதமரை நேரில் சந்தித்து 4 முக்கியக் கோரிக்கைகளை முன்வைத்துள்ளார். இதன் மூலம் தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே ஒரு இணக்கமான சூழ்நிலை நிலவ வேண்டும் என முதலமைச்சர் நினைக்கிறார் என்று நான் நம்புகிறேன். இதற்கு முன் முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் மத்திய அரசிடம் இருந்து நிதியைக் கேட்டுப் பெறுவதில் பெரும் தயக்கம் காட்டினார். மேலும், தன்னுடைய நிர்வாகத் தவறுகளுக்கு எல்லாம் மத்திய அரசு மீது தொடர்ந்து குற்றம் சாட்டி வந்ததால்தான் மக்கள் அவரைத் தூக்கி எறிந்துள்ளனர். பாஜகவைப் பொறுத்தவரை தமிழ்நாட்டின் வளர்ச்சி மட்டுமே என்றும் மிக முக்கியம்.”
அரசியலில் குதிரை பேரம்: “தமிழக அரசியலில் தற்பொழுது குதிரை பேர அரசியல் வந்துவிட்டது என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. குதிரையை விற்கப்போவதால்தான் அங்கே வியாபாரம் மிகத் தீவிரமாக நடக்கிறது. ஒரு கட்சியில் நின்று அதன் சின்னத்தில் ஓட்டுப் பெற்று வெற்றி பெற்றுவிட்டு, சுயநலத்திற்காக ஆளுங்கட்சிக்குச் செல்பவர்கள் எச்சில் இலைக்குச் செல்லும் நாய்களைப் போன்றவர்கள்.”
தேர்தல் செலவைத் திரும்பப் பெற வேண்டும்: “அரசியலில் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டு, பின்னர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்கிறவர்கள் மற்றும் மாற்றுக் கட்சிக்குச் செல்வதற்காகத் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்கிறவர்கள் ஆகியோரால் மக்களுக்குத்தான் வீண் செலவு ஏற்படுகிறது. எனவே, அவர்கள் அந்தத் தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடத்த அரசு செலவிடும் ஒட்டுமொத்தத் தொகையையும் தங்களது சொந்தப் பணத்தில் இருந்து அரசிடம் செலுத்த வேண்டும் என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும்.”
மேலும், தமிழ்நாட்டில் பாஜக-வின் வாக்கு வங்கி சரிந்தது குறித்த கேள்விக்கு, “பாஜக-வின் வாக்கு வங்கி குறைந்ததற்கு தவெக தலைவர் விஜயின் அரசியல் வருகைதான் முக்கியக் காரணம். இந்தத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதைவிட, யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாகப் பேசினோம்; அது தற்பொழுது நடந்துள்ளது” என்று குறிப்பிட்டார்.
திருச்செந்தூர் கோவிலில் முகமூடி அணிந்து ஆய்வு செய்த அறநிலையத்துறை அமைச்சரிடம் அர்ச்சகர் லஞ்சம் கேட்டுச் சிக்கியுள்ள விவகாரமும், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தவெக இணைப்பு குறித்துச் செய்தியாளர்களிடம் மழுப்பலாகப் பதிலளித்துள்ள அரசியல் சஸ்பென்ஸ்களும் நிலவி வரும் தற்போதைய சூழ்நிலையில், கரூரில் முதல்வர் விஜயின் டெல்லி பயணம் மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்துப் பாஜக மூத்த தலைவர் கே.பி.ராமலிங்கம் விடுத்துள்ள இந்த கறாரான பேட்டி தமிழக அரசியல் மேடைகளில் புதிய விவாதப் புயலைக் கிளப்பியுள்ளது.
