Home செங்கல்பட்டு கூடலூர் ஏரிக்கரை சாலையில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை

கூடலூர் ஏரிக்கரை சாலையில் தடுப்புகள் அமைக்க கோரிக்கை

0

மறைமலை நகர் நகராட்சிக்கு உட்பட்ட கூடலூர் ஏரிக்கரை சாலையில் பாதுகாப்பு வசதிகள் இல்லாததால் விபத்து அபாயம் அதிகரித்துள்ளதாக வாகன ஓட்டிகள் கவலை தெரிவித்துள்ளனர். உடனடியாக இரும்பு தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் அமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மறைமலை நகர் அருகே அமைந்துள்ள கூடலூர் ஏரிக்கரை சாலை சுமார் 2 கிலோமீட்டர் நீளமுடையது. மட்டண ஓடை, கோகுலாபுரம், கருநிலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் மறைமலை நகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளுக்கு சென்று வர இந்த சாலையை முக்கிய போக்குவரத்து பாதையாக பயன்படுத்தி வருகின்றனர்.

இப்பகுதியில் பேருந்து வசதி இல்லாத காரணத்தால் பெரும்பாலான பொதுமக்கள் இருசக்கர வாகனங்களை நம்பியே பயணம் செய்து வருகின்றனர். குறிப்பாக வேலை, கல்வி மற்றும் அன்றாட தேவைகளுக்காக நூற்றுக்கணக்கானோர் இந்த சாலையை பயன்படுத்துகின்றனர்.

கூடலூர் ஏரிக்கரை கலங்கல் பகுதியில் ஆபத்தான வளைவு காணப்படுகிறது. அந்த பகுதியில் சாலையோரம் பாதுகாப்பு இரும்பு தடுப்புகள் மற்றும் எச்சரிக்கை பலகைகள் எதுவும் இல்லாததால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணிக்க வேண்டிய சூழல் நிலவுகிறது.

வாகன ஓட்டிகள் கூறுகையில், இந்த சாலையில் மூன்று முக்கிய வளைவுகள் உள்ளன. புதிய மற்றும் வெளிநாட்டு வாகன ஓட்டிகள் வேகமாக வரும்போது சாலையின் தன்மையை அறியாமல் விபத்துகளில் சிக்கக்கூடிய அபாயம் உள்ளது. மேலும் சாலையோர தெருவிளக்குகள் பல நாட்களாக செயல்படாததால் இரவு நேரங்களில் நிலைமை இன்னும் மோசமாக இருப்பதாக தெரிவித்தனர்.

எனவே பெரும் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுவதற்கு முன்பாகவே நகராட்சி நிர்வாகம் ஆய்வு செய்து இரும்பு தடுப்பு கம்பிகள், எச்சரிக்கை பலகைகள் மற்றும் தெருவிளக்குகளை உடனடியாக அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version