Home செங்கல்பட்டு பாலில் மயக்க மருந்து கலந்து 51 சவரன் கொள்ளை! நேபாள பெண்ணின் கைவரிசை!

பாலில் மயக்க மருந்து கலந்து 51 சவரன் கொள்ளை! நேபாள பெண்ணின் கைவரிசை!

0

கிளாம்பாக்கம் அருகே ஓய்வு பெற்ற மத்திய அரசு அதிகாரி மற்றும் அவரது மனைவிக்கு பாலில் மயக்க மருந்து கொடுத்து, 51 சவரன் தங்க நகைகளைத் திருடிச் சென்ற நேபாளத்தைச் சேர்ந்த வேலைக்காரப் பெண்ணை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். பணியில் சேர்ந்த ஒரே வாரத்தில் இந்தப் பெண் இத்தகைய துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிளாம்பாக்கம் அடுத்த கொளப்பாக்கம், டி.வி.எஸ். கிரீன் குடியிருப்பில் வசித்து வருபவர் ராஜேந்திரன் (61). மத்திய அரசு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருடன், இவரது மனைவி உஷாராணி (57) வசித்து வருகிறார். இவர்களுக்கு வீட்டு வேலை செய்ய உதவி தேவைப்பட்டதால், கடந்த வாரம் நேபாளத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பணியமர்த்தியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதியருக்கு, அந்தப் பெண் வழக்கம்போல குடிக்கப் பால் கொடுத்துள்ளார்.

வேலைக்காரப் பெண் கொடுத்த பாலைக் குடித்த சிறிது நேரத்திலேயே ராஜேந்திரனும், உஷாராணியும் ஆழ்ந்த மயக்க நிலைக்குச் சென்றுள்ளனர். மறுநாள் காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் எழவில்லை. ஒருவழியாக கண் விழித்துப் பார்த்தபோது, உஷாராணி அணிந்திருந்த 51 சவரன் நகைகள் திருடப்பட்டிருப்பதைக் கண்டு உறைந்து போயினர். மேலும், அந்தப் பெண் வீட்டில் இல்லை என்பதும், வீட்டின் வெளிக்கதவு பூட்டப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

பாதிக்கப்பட்ட தம்பதியினர் அளித்த தகவலின் பேரில், கிளாம்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கதவை உடைத்து அவர்களை மீட்டனர். பாலில் மயக்க மருந்து கலந்திருப்பதை உறுதி செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் முடுக்கிவிட்டுள்ளனர். அந்தப் பெண் குறித்த அடையாளங்கள் மற்றும் அவர் பணியாற்றிய ஏஜென்சி குறித்த விவரங்களைச் சேகரித்து வரும் போலீசார், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர். முன்பின் தெரியாத நபர்களை வீட்டு வேலைக்குப் பணியமர்த்தும் போது உரியக் காவல் துறை சரிபார்ப்பு (Police Verification) அவசியம் எனப் போலீசார் மீண்டும் எச்சரித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version