வாக்களித்துவிட்டு சென்னை திரும்பும் மக்கள்: கிளாம்பாக்கம் ஸ்தம்பிப்பு

0
3

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 23-ஆம் தேதி வாக்களிப்பதற்காகத் தங்களது சொந்த ஊர்களுக்குச் சென்ற தென் மாவட்ட மக்கள் விடுமுறை முடிந்து இன்று காலை முதலே சென்னை நோக்கித் திரும்பத் தொடங்கியுள்ளனர் இதன் காரணமாக வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பயணிகளின் கூட்டம் அதிகரித்துக் காணப்படுகிறது

நாளை திங்கட்கிழமை முதல் அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் வழக்கம் போல் இயங்க உள்ள நிலையில் பொதுமக்கள் அனைவரும் ஒரே நேரத்தில் சென்னைக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இன்று அதிகாலை முதலே அரசுப் பேருந்துகள் மற்றும் ஆம்னி பேருந்துகள் மூலமாக ஆயிரக்கணக்கான மக்கள் கிளாம்பாக்கத்திற்குச் சாரை சாரையாக வந்த வண்ணம் உள்ளனர்

தென் மாவட்டங்களில் இருந்து வரும் பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே உள்ள திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை இறக்கி விடுகின்றன அங்கிருந்து பயணிகள் மாநகரப் பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்காகத் தேசிய நெடுஞ்சாலையின் இருபுறத்தையும் கடந்து செல்கின்றனர்

நெடுஞ்சாலையைக் கடந்து மாநகரப் பேருந்து நிலையத்திற்கு வரும் பொதுமக்கள் அங்கிருந்து சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும் புறநகர் பகுதிகளுக்கும் மாநகரப் பேருந்துகள் மூலம் தங்களது பயணத்தைத் தொடர்கின்றனர். இதனால் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் வழக்கத்திற்கு மாறாக பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.