செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே உள்ள கல்வாய் கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு சக்தி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
பல ஆண்டுகள் பழமையான இந்த சக்தி விநாயகர் கோவில் காலப்போக்கில் சிதிலமடைந்த நிலையில் இருந்தது. இதையடுத்து ஆலயத்தை புதுப்பித்து திருப்பணிகள் மேற்கொள்ள கிராம மக்கள் மற்றும் பக்தர்கள் முடிவு செய்தனர். அதன்படி கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து மகா கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டது.
விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை 9 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், தன பூஜை உள்ளிட்ட முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
நேற்று அதிகாலை 5 மணியளவில் விக்னேஸ்வர பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து காலை 8 மணிக்கு மங்கள வாத்தியங்கள் முழங்க யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் அடங்கிய கலசங்கள் கோவில் விமானத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதியபடி கோவில் விமானம் மற்றும் மூலவர் சக்தி விநாயகருக்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். அப்போது பக்தர்கள் “விநாயகா போற்றி” என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர்.
கும்பாபிஷேகத்தைத் தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
