தமிழ்நாட்டில் பெண்களுக்காக செயல்படுத்தப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடர்பாக புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இதுவரை ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி 1.31 கோடி பெண்களின் வங்கி கணக்கில் ரூ.1000 உரிமைத்தொகை நேரடியாக வரவு வைக்கப்பட்டு வந்தது. ஆனால் மே 2026 மாதத்திற்கான தொகை நாளை வரவு வைக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
கடந்த மே 10ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் புதிய அரசாக பொறுப்பேற்றதை தொடர்ந்து, இந்தத் திட்டம் எதிர்காலத்தில் தொடருமா என்ற கேள்வி பெண்கள் மத்தியில் எழுந்துள்ளது. இதற்கிடையில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், மகளிர் உரிமைத்தொகை திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய அரசுக்கு கால அவகாசம் தேவைப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், மே 2026 மாதத்திற்கான ரூ.1000 உரிமைத்தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் விரைவில் நேரடியாக வரவு வைக்கப்படும் என்றும் உறுதியளித்துள்ளார்.
அரசின் “மறுசீரமைப்பு” அறிவிப்பு பெண்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்தத் திட்டத்தின் கீழ் 1.31 கோடி பெண்கள் பயன் பெற்று வரும் நிலையில், மறுசீரமைப்பு என்ற பெயரில் பயனாளிகள் நீக்கப்படுவார்களா என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் M. K. Stalin தனது எக்ஸ் பதிவில் அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். தேர்தலின்போது மாதம் ரூ.2500 வழங்குவதாக கூறிவிட்டு, தற்போது ரூ.1000 வழங்குவதற்கே மறுசீரமைப்பு தேவைப்படுகிறது என கூறுவது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், முந்தைய அரசின் நலத்திட்டங்கள் தொடரும் என அறிவித்துவிட்டு தற்போது மாற்றம் பேசப்படுவது ஏன் என்றும் விமர்சித்துள்ளார். மே 15ஆம் தேதியே பெண்களின் கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.




