அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நீடித்து வரும் மோதல் போக்கு மீண்டும் போராக வெடிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஈரானிய ஆயுதப் படைகள் இன்று எச்சரித்துள்ளன. அமெரிக்காவின் எந்தவொரு புதிய தாக்குதலையும் எதிர்கொள்ளத் தங்கள் படைகள் முழு அளவில் தயாராக இருப்பதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே நிரந்தரப் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காகப் பாகிஸ்தானில் 21 மணிநேரம் தொடக்கக் கட்ட அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு உடன்பாடும் எட்டப்படாமல் தோல்வி அடைந்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்கா எந்தவித ஒப்பந்தத்திற்கும் உடன்படவில்லை என்றும், இரு நாடுகளுக்கும் இடையே தற்போது போர்நிறுத்த ஒப்பந்தம் எதுவும் செயல்பாட்டில் இல்லை என்றும் ஈரானின் கதம் அல்-அன்பியா தலைமையகத்தின் துணை ஆய்வாளர் சர்தார் ஆசாதி தெரிவித்துள்ளார்.
கடந்த பிப்ரவரி 28-ஆம் தேதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதலில் 2,000-க்கும் மேற்பட்ட ஈரானிய மக்கள் உயிரிழந்தனர். சுமார் 40 நாட்கள் நீடித்த இந்த மோதலுக்குப் பிறகு, ஏப்ரல் 8-ஆம் தேதி இரண்டு வார காலப் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்தப் போர் நிறுத்த நீட்டிப்புக்கான அறிவிப்பை அதிபர் டிரம்ப் வெளியிட்டிருந்தாலும், கள நிலவரம் பதற்றமாகவே உள்ளது.
பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடுவதுடன், கடுமையான பொருளாதார நெருக்கடியைத் தொடரப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. அமெரிக்காவின் செயல்கள் அனைத்தும் எண்ணெய் விலை குறைப்பைத் தடுக்கும் நோக்கம் கொண்டவை என்றும், அவர்கள் உருவாக்கிய குழப்பத்திலிருந்து அவர்களே வெளியேற முயற்சிப்பதாகவும் ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்கர்களின் “முட்டாள்தனமான” எந்தவொரு புதிய தாக்குதலையும் எதிர்கொள்ள ஈரான் ராணுவம் விழிப்புடன் இருப்பதாக சர்தார் ஆசாதி எச்சரித்துள்ளார்.
மேற்காசிய மோதலில் இதுவரை 8 நாடுகளில் உள்ள 16 அமெரிக்க ராணுவத் தளங்களை ஈரான் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளது. இதில் குவைத் நாட்டில் உள்ள பெரிய அமெரிக்க ராணுவ மையம் பலத்த சேதமடைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் வளைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் மீண்டும் சூழத் தொடங்கியுள்ளன.
