Home செங்கல்பட்டு இடைக்கழிநாட்டில் பலாப்பழ சீசன் தொடக்கம்

இடைக்கழிநாட்டில் பலாப்பழ சீசன் தொடக்கம்

0

செய்யூர் அருகே உள்ள இடைக்கழிநாடு பகுதியில் இந்த ஆண்டுக்கான பலாப்பழ சீசன் தொடங்கியுள்ள நிலையில், பலாப்பழ விற்பனை தற்போது அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கடப்பாக்கம், கரும்பாக்கம், வெண்ணாங்குப்பட்டு, வேம்பனூர், விளம்பூர், கோட்டைக்காடு, பனையூர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பெரும்பாலான மக்கள் விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக மாமரம் மற்றும் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக பலாப்பழம் அதிகளவில் பயிரிடப்படுகிறது.

சுமார் 300 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் பலாப்பழ மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஆண்டுதோறும் மே மாதத்தில் தொடங்கும் பலாப்பழ சீசன் செப்டம்பர் மாத இறுதிவரை நீடிக்கும். இந்தாண்டும் சீசன் துவங்கியுள்ளதால், பல்வேறு பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் வருகை தருகின்றனர்.

இங்கு விளையும் பலாப்பழங்கள் நேரடியாக சில்லறை மற்றும் மொத்த விற்பனையாக விற்கப்படுகின்றன. மேலும் சென்னை, புதுச்சேரி, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட தென்னிந்திய நகரங்களுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

பலாப்பழத்தின் அளவு மற்றும் தரத்தை பொறுத்து ஒரு பழம் ரூ.150 முதல் ரூ.400 வரை விற்பனை செய்யப்படுகிறது. கிழக்குக் கடற்கரை சாலை வழியாக பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் பலாப்பழங்களை வாங்கிச் செல்கின்றனர்.

இதனால் இடைக்கழிநாடு பகுதியில் தற்போது பலாப்பழ சந்தை பரபரப்பாக காணப்படுகிறது.

NO COMMENTS

Exit mobile version