தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள், வாக்குப்பதிவு முடிந்ததையடுத்து மீண்டும் நகரங்களுக்கு திரும்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு முக்கிய சாலைகளிலும், குறிப்பாக சென்னை நோக்கி வரும் தேசிய நெடுஞ்சாலைகளிலும் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.
சென்னையை நோக்கி திரும்பும் வாகனங்களின் எண்ணிக்கை இன்று அதிகரித்துள்ளதால், பல சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட வரிசையாக காத்திருக்கின்றன. குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள பரனூர் சுங்கச்சாவடி, சென்னை நகருக்கான முக்கிய நுழைவாயிலாக இருப்பதால், அங்கு மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. பல கிலோமீட்டர் தூரம் வரை வாகனங்கள் மெதுவாக நகரும் நிலை காணப்படுகிறது.
பொதுமக்கள் தங்கள் ஊர்களில் வாக்களித்துவிட்டு, வேலை மற்றும் கல்வி காரணங்களுக்காக மீண்டும் சென்னை திரும்புகின்றனர். இதனால் தனியார் கார்கள், பேருந்துகள், வேன்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்கள் ஒரே நேரத்தில் சாலைகளில் அதிக அளவில் திரண்டுள்ளன. இதை சமாளிக்க போக்குவரத்து போலீசார் கூடுதல் பணியில் ஈடுபட்டு, வாகன ஓட்டத்தை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சுங்கச்சாவடிகளில் கட்டண வசூல் ரொக்கமாக பெறுவதற்கு பதிலாக பாஸ்ட் டேக் மற்றும் யுபிஐ வசதி செய்யப்பட்டுள்ளது. எனினும் பெரும்பாலான வாகன ஓட்டிகள் பாஸ்ட் டேக் நடைமுறைக்கு மாறாத காரணத்தால் சுங்கச்சாவடியில் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அது மட்டுமின்றி, அதிகளவிலான வாகன வரத்து காரணமாக முழுமையாக நெரிசலை கட்டுப்படுத்த முடியாத நிலை உள்ளது.
போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மாற்றுப்பாதைகளை பயன்படுத்துமாறு பொதுமக்களுக்கு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், பயணிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டு, அதிக நெரிசல் நேரங்களை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.





