வெப்பவாதத்திற்கு பாராசிட்டமால் தீர்வல்ல…

0
5

தமிழகத்தில் கடும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வெப்பவாதம் தொடர்பான பாதிப்புகள் அதிகரித்து வருவதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்த சூழலில், உடல் வெப்பநிலையை குறைக்க மருத்துவரின் ஆலோசனையின்றி பாராசிட்டமால் மாத்திரைகளை எடுத்துக்கொள்வது ஆபத்தானது என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் 100 டிகிரி பாரன்ஹீட்டிற்கும் மேல் வெப்பநிலை பதிவாகி வருகிறது. இதனால் வெப்பவாதம், நீரிழப்பு மற்றும் வைரஸ் தொற்றுகள் போன்ற உடல்நலப் பிரச்சினைகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. குறிப்பாக, வெப்பவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உடல் வெப்பநிலையை குறைக்க சிலர் தாமாகவே மருந்துகள் எடுத்துக்கொள்வதாக கூறப்படுகிறது.

இது கடுமையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்பதால், எந்தவொரு மருந்தையும் மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள வேண்டாம் என்று பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. வெப்பவாதம் ஏற்பட்டவர்களுக்கு மயக்கம், தலைசுற்றல் அல்லது அதிக சோர்வு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அவர்களை நிழல் மற்றும் காற்றோட்டம் உள்ள இடத்திற்கு மாற்ற வேண்டும்.

மேலும், அவர்களை ஒரு பக்கமாக படுக்க வைத்து, தண்ணீர், இளநீர், மோர் போன்ற திரவங்களை பருகச் செய்து உடல் வெப்பநிலையை இயல்புக்கு கொண்டு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடுமையான நிலை ஏற்பட்டால் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை காலத்தில் போதிய அளவு தண்ணீர் குடிப்பது, நேரடி வெயிலில் அதிக நேரம் இருக்காமல் தவிர்ப்பது மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவது அவசியம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.