Home செங்கல்பட்டு கூடுவாஞ்சேரி மின்வெட்டு பிரச்சினை: அதிகாரியை கண்டித்த கலெக்டர் மாலதி ஹெலன்!

கூடுவாஞ்சேரி மின்வெட்டு பிரச்சினை: அதிகாரியை கண்டித்த கலெக்டர் மாலதி ஹெலன்!

0

செங்கல்பட்டு மாவட்டத்தில் தொடர்ந்து நிலவி வரும் மின்வெட்டு பிரச்சினையால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் மக்கள் மிகுந்த சிரமம் அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து பல்வேறு புகார்கள் எழுந்த நிலையில், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் முக்கிய மனு ஒன்று அளிக்கப்பட்டது.

கூடுவாஞ்சேரி முன்னாள் நகர்மன்றத் தலைவர் எம்.கே.டி. கார்த்திக் தண்டபாணி, மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலனை நேரில் சந்தித்து, கூடுவாஞ்சேரியில் தொடர்ச்சியாக ஏற்படும் மின்வெட்டு குறித்து மனு வழங்கினார். அந்த மனுவில், பொதுமக்கள், முதியவர்கள், மாணவர்கள் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து, ஆட்சியர் மாலதி ஹெலன் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளிடம் உடனடியாக விளக்கம் கேட்டார். அப்போது அதிகாரி ஒருவர், மின்வெட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வழங்க தேவையான முன்மொழிவை தயாரிக்க ஒரு மாத காலம் ஆகும் என பதிலளித்ததாக கூறப்படுகிறது.

அதற்கு அதிருப்தி தெரிவித்த ஆட்சியர், “ஏன் ஒரு மாதம் ஆக வேண்டும்?” என்று அதிகாரியிடம் கடுமையாக கேள்வி எழுப்பினார். மேலும், பொதுமக்களின் பிரச்சினையை உடனடியாக தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்திய அவர், வரும் திங்கட்கிழமைக்குள் திட்ட அறிக்கையை சமர்ப்பிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆட்சியரின் இந்த திடீர் நடவடிக்கை பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. மின்வெட்டு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடையே உருவாகியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version