தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் அனல் பறக்கும் வேளையில், செங்கல்பட்டு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி தனது தொகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக காட்டாங்குளத்தூர் ஒன்றியம், பெரும்பாட்டு நல்லூர் ஊராட்சிக்கு வருகை தந்த அவருக்குத் தொண்டர்களும் பொதுமக்களும் வரவேற்பு அளித்தனர்.
இருசக்கர வாகன அணிவகுப்புடன் அதிரடியாக என்ட்ரி கொடுத்த வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி தொகுதிக்குள் நுழைந்தபோது, கூட்டணி கட்சி நிர்வாகிகள் நூற்றுக்கணக்கான இருசக்கர வாகனங்களில் அணிவகுத்து வந்தனர். “உதயசூரியன் வாழ்க” என விண்ணதிர முழக்கமிட்டபடி வேட்பாளரை அவர்கள் உற்சாகமாக அழைத்து வந்தனர். இந்தப் பேரணி அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்தது.
கிரீடம், வாள் மற்றும் ஜே.சி.பி மலர் தூவல்
பெரும்பாட்டு நல்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் பகவதி நாகராஜன் தலைமையில் வேட்பாளருக்குச் சிறப்பான கௌரவம் அளிக்கப்பட்டது.
வேட்பாளர் கார்த்திக் தண்டபாணிக்குத் தங்க நிறக் கிரீடம் அணிவிக்கப்பட்டு, வீரத்தின் அடையாளமாக ‘வாள்’ வழங்கி உற்சாகப்படுத்தப்பட்டது.
தொண்டர்கள் ஒரு படி மேலே சென்று, பிரம்மாண்டமான ஜே.சி.பி (JCB) இயந்திரம் மூலம் டன் கணக்கிலான மலர்களை வாரி இறைத்து வேட்பாளரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர். வழிநெடுகிலும் பெண்கள் ஆரத்தி எடுத்தும், பூக்களைத் தூவியும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.
குறைகளைக் கேட்டறிந்து வாக்கு சேகரிப்பு
ஆடம்பரமான வரவேற்புகளைத் தொடர்ந்து, வேட்பாளர் கார்த்திக் தண்டபாணி தொகுதி மக்களிடையே உரையாற்றினார். மக்களின் நீண்ட காலக் கோரிக்கைகள் மற்றும் அடிப்படைத் தேவைகளைக் கேட்டறிந்த அவர், “தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமையவும், உங்கள் குறைகள் தீரவும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களியுங்கள்” என உருக்கமாக வேண்டுகோள் விடுத்தார்.
இந்த நிகழ்வில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள், கூட்டணி கட்சிகளின் பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் பெருமளவில் திரளாகக் கலந்துகொண்டு தங்களது ஆதரவை உறுதி செய்தனர். செங்கல்பட்டு தொகுதியில் திமுக வேட்பாளருக்குக் கிடைத்து வரும் இந்த அமோக வரவேற்பு மற்ற கட்சியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
