செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், பல்வேறு அரசு வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஜூன் 15 முதல் தொடங்கப்பட உள்ளன.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC), பணியாளர் தேர்வாணையம் (SSC), ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB), வங்கி பணியாளர் தேர்வுகள் மற்றும் சீருடைப் பணியாளர் தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
பயிற்சி வகுப்புகளில் துறைசார் வல்லுநர்கள் மூலம் தேர்வு பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படுவதுடன், மாதிரித் தேர்வுகள், தேர்வு உத்திகள் மற்றும் பாடக் குறிப்புகள் ஆகியவை இலவசமாக வழங்கப்பட உள்ளன. போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற விரும்பும் இளைஞர்களுக்கு இந்த பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சியில் கலந்து கொள்ள விரும்பும் இளைஞர்கள் செங்கல்பட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் சென்று பதிவு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.
