Home செங்கல்பட்டு பாலூரில் கள்ளச்சந்தை மது விற்பனை: 200 பாட்டில்கள், 2 பைக்குகள் பறிமுதல் – 4 பேர்...

பாலூரில் கள்ளச்சந்தை மது விற்பனை: 200 பாட்டில்கள், 2 பைக்குகள் பறிமுதல் – 4 பேர் அதிரடி கைது!

0

செங்கல்பட்டு அருகே பாலூர் பகுதியில் கள்ளச்சந்தையில் மது பாட்டில்களைப் பதுக்கி வைத்து, இரட்டிப்பு விலைக்கு விற்பனை செய்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பலை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 200-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

பாலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமப்புறங்களில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்பனை செய்யப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பாலூர் காவல் ஆய்வாளர் சதீஷ் தலைமையிலான போலீசார் நேற்று இரவு செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு பேர், போலீசாரைக் கண்டதும் தப்பியோட முயன்றனர்.

உஷாரான போலீசார் அந்த நான்கு பேரையும் விரட்டிப் பிடித்து, அவர்கள் வைத்திருந்த பைகளைச் சோதனை செய்தனர். அதில் விற்பனைக்காக மறைத்து வைக்கப்பட்டிருந்த 200-க்கும் மேற்பட்ட மது பாட்டில்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அவர்கள் மேல் மணப்பாக்கத்தைச் சேர்ந்த அன்பு (55), மேலச்சேரியைச் சேர்ந்த ஆகாஷ் (31), முருகன் (30) மற்றும் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த கௌதம் (35) என்பது தெரியவந்தது.

கைதான நபர்கள் சாஸ்திரம்பாக்கம் அரசு டாஸ்மாக் கடையில் மொத்தமாக மது பாட்டில்களை வாங்கி வந்து, இரவு நேரங்களிலும் கடை இல்லாத நேரங்களிலும் தங்கள் கிராமங்களில் கூடுதல் விலைக்கு விற்று வந்தது விசாரணையில் அம்பலமானது. இதனையடுத்து, அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், நான்கு பேரையும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்களின் இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழகத்தில் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத மது விற்பனைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், பாலூரில் நடந்துள்ள இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version