செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள புக்கத்துறை வடிகால்வாயில் ₹36 லட்சம் சிஎஸ்ஆர் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்து, நீர்வளத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 11 கிலோமீட்டர் நீளத்திற்கு மேற்கொள்ளப்பட்ட இந்த பணிகள் மூலம் கால்வாயில் தேங்கியிருந்த மணல் மற்றும் கழிவுகள் அகற்றப்பட்டு, நீரோட்டம் சீர்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களின் விவசாய நிலங்களுக்கு நீர் வசதி மேம்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கிலும் இந்த திட்டம் முக்கிய பங்காற்றும் என கூறப்படுகிறது. குறிப்பாக கோடை காலங்களில் நீர் தட்டுப்பாட்டால் அவதிப்படும் விவசாயிகள் மற்றும் கிராம மக்களுக்கு இந்த சீரமைப்பு திட்டம் பெரும் நன்மையை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, விவசாய பயன்பாட்டை மேலும் வலுப்படுத்தும் வகையில் விரைவில் புதிய தடுப்பணை கட்டப்படும் என உறுதி அளித்தார்.
புதிய தடுப்பணை அமைக்கப்பட்டால் மழைநீர் சேமிப்பு அதிகரித்து, பாசன வசதியும் மேம்படும். இதனால் பல கிராமங்களில் விவசாய உற்பத்தி உயர வாய்ப்பு இருப்பதாக விவசாயிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டம் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் சமூக பொறுப்பு நிதி (CSR) மூலம் செயல்படுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
