தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் இன்று மகுடம் சூடிய வரலாற்று நிகழ்வை ஒட்டுமொத்தத் தேசமும் உற்று நோக்கிய நிலையில், தமிழகத்தின் பாரம்பரிய அரசியல் சக்திகளான திமுக மற்றும் அதிமுக முகாம்கள் இந்த விழாவைப் புறக்கணித்துள்ளன. குறிப்பாக, சட்டமன்றத் தேர்தலில் சந்தித்த படுதோல்வியால் அதிமுக-விற்குள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகப் பெரும் போர்க்கொடி தூக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி உள்ளிட்ட தேசியத் தலைவர்கள் பங்கேற்ற போதிலும், தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான மு.க. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. தங்களின் அரசியல் இருப்பைக் கேள்விக்குறியாக்கிய ஒரு புதிய சக்தியின் பதவியேற்பு விழாவை அவர்கள் தவிர்த்திருப்பது அரசியல் ரீதியாகப் பல்வேறு விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
தேர்தல் தோல்விக்குப் பிறகு அதிமுக-விற்குள் பூகம்பம் வெடிக்கத் தொடங்கியுள்ளது. அதிமுக படுதோல்வி அடைந்ததற்குக் தலைமைதான் காரணம் எனக்கூறி, முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் பல எம்.எல்.ஏ-க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராகத் திரண்டுள்ளனர். கட்சி உருப்பட வேண்டுமென்றால் எடப்பாடி பழனிசாமி தலைமைப் பொறுப்பிலிருந்து ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என அவர்கள் பகிரங்கமாகவே வலியுறுத்தத் தொடங்கியுள்ளனர்.
விஜய் முதலமைச்சராகப் பதவியேற்றுப் பேருரை ஆற்றிய அதே நேரத்தில், சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனையில் ஈடுபட்டார்.
சி.வி. சண்முகம் தரப்பின் எதிர்ப்பை முறியடிப்பது மற்றும் கட்சியின் பிளவுபடும் நிலையைக் கட்டுப்படுத்துவது குறித்து அவர் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது. அதிமுக-வின் வாக்கு வங்கி பெருமளவில் தவெக-விற்குச் சென்றுள்ள நிலையில், கட்சியை மீண்டும் எப்படிக் கட்டியெழுப்புவது என்பது குறித்து தீவிரமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் யுகம் தொடங்கியிருக்கும் வேளையில், தங்களின் கோட்டையைக் காப்பாற்றிக் கொள்ளப் போராடும் நிலையில் திமுக மற்றும் அதிமுக இருப்பது அக்கட்சிகளின் தொண்டர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
