சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாக வாக்களித்த எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட 25 எம்.எல்.ஏ-க்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்களின் கட்சிப் பதவிகளைப் பறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகச் சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற தவெக அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு, அதிமுகவில் மிகப்பெரிய பிளவை ஏற்படுத்தியுள்ளது. கட்சியின் கொறடா உத்தரவை மீறி முதலமைச்சர் விஜய்க்கு ஆதரவாகச் செயல்பட்ட முக்கியத் தலைவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அரசுக்கு ஆதரவாக வாக்களித்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் மீது எடப்பாடி பழனிசாமி எடுத்துள்ள நடவடிக்கை எடுத்துள்ளார். முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், எஸ்பி வேலுமணி, சிவி சண்முகம், சி.விஜயபாஸ்கர், காமராஜ், கேபி அன்பழகன் உள்ளிட்டோர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட கட்சிப் பொறுப்புகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இசக்கி சுப்பையா, கேசி வீரமணி, எம்ஆர் விஜயபாஸ்கர், பாலகிருஷ்ண ரெட்டி, அருண்மொழிதேவன் மற்றும் சுகுமாரி ஆகியோரும் பதவிகளிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். சிவி சண்முகம் தரப்புக்கு ஆதரவாகச் செயல்பட்ட முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, உடுமலை ராதாகிருஷ்ணன், பென்ஜமின், ஜக்கையன் மற்றும் எம்சி சம்பத் ஆகியோரின் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன.
மொத்தம் 26 மாவட்டச் செயலாளர் பொறுப்புகளிலிருந்து நிர்வாகிகளை நீக்கிய எடப்பாடி பழனிசாமி, அந்த இடங்களுக்கு உடனடியாகப் புதிய நிர்வாகிகளை நியமித்து உத்தரவிட்டுள்ளார். கட்சித் தலைமையின் உத்தரவை மீறி தவெக அரசுக்கு ஆதரவளித்தவர்கள் மீதான இந்த அதிரடி நடவடிக்கை அதிமுக தொண்டர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு ஆதரவாக 144 வாக்குகள் விழுந்த நிலையில், அதில் அதிமுகவின் 25 எம்.எல்.ஏ-க்களின் பங்களிப்பு மிக முக்கியமாகப் பார்க்கப்பட்டது. குறிப்பாக, சிவி சண்முகம் மற்றும் எஸ்பி வேலுமணி போன்ற கட்சியின் தூண்களாகக் கருதப்பட்டவர்கள் இந்த முடிவை எடுத்தது இபிஎஸ் தலைமைக்கு விடப்பட்ட சவாலாகவே கருதப்படுகிறது.
அதிமுகவில் ஏற்பட்டுள்ள இந்த அதிகாரப்பூர்வப் பிளவு, கட்சியின் எதிர்காலத்தைப் பாதிக்குமா அல்லது இபிஎஸ் தனது தலைமையைக் காப்பாற்றிக் கொள்வாரா? மாவட்டச் செயலாளர்கள் நீக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தகட்டமாக எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்களா? உங்கள் கருத்து என்ன?
