நெல்லுக்கான ஆதார விலை உயர்வு: மத்திய அமைச்சரவை அதிரடி ஒப்புதல்!

0
3

விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் நோக்கில், 2026-27-ஆம் நிதியாண்டிற்கான 14 வகையான கரீப் பருவப் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) உயர்த்தி மத்திய அமைச்சரவை இன்று அதிரடி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த விலை உயர்வு அறிவிப்பு நாடு முழுவதும் உள்ள விவசாயிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

மத்திய அமைச்சரவை கூட்டத்திற்குப் பிறகு வெளியிடப்பட்டுள்ள புதிய விலைப்பட்டியலில், நெல் மற்றும் பருப்பு வகைகளுக்குக் குறிப்பிடத்தக்க அளவில் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

நெல்: குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 72 உயர்த்தப்பட்டு, ரூ. 2,441 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

துவரம் பருப்பு: குவிண்டாலுக்கு ரூ. 450 உயர்த்தப்பட்டு, ரூ. 8,450 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

உளுத்தம் பருப்பு: குவிண்டாலுக்கு ரூ. 400 உயர்த்தப்பட்டு, ரூ. 8,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

நிலக்கடலை: குவிண்டாலுக்கு ரூ. 254 உயர்த்தப்பட்டு, ரூ. 7,517 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பருத்தி: குவிண்டாலுக்கு ரூ. 557 உயர்த்தப்பட்டு, ரூ. 8,267 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மக்காச்சோளம், ராகி, கம்பு, பாசிப்பருப்பு மற்றும் சூரியகாந்தி எண்ணெய் வித்துகள் உள்ளிட்ட மொத்தம் 14 பயிர்களுக்கு இந்த விலை உயர்வு பொருந்தும்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பைப் பாராட்டி தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை விடுத்துள்ள அறிக்கையில், “விவசாயிகள் நலனை முன்னிறுத்தி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ள பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றிகள். இது தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கான சிறு, குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

அண்ணாமலை தனது அறிக்கையில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழலையும் சுட்டிக்காட்டியுள்ளார். “தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக, ஒரு குவிண்டால் நெல்லுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ. 3,500 வழங்கப்படும் என்று கூறித்தான் முதலமைச்சர் விஜய் ஆட்சிக்கு வந்துள்ளார்.

மத்திய அரசு தற்போது விலையை உயர்த்தியுள்ள நிலையில், தமிழக அரசு தனது சார்பாக வழங்கும் ஊக்கத்தொகையை உடனடியாக உயர்த்தி, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிப்படி ரூ. 3,500 வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என எதிர்பார்க்கிறோம்,” என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.