311 கோடி எஸ்பிஐ வங்கி மோசடி: பினாமிகளின் பெயரில் 43 சொத்துக்கள்!

0
6

பாரத ஸ்டேட் வங்கி (SBI) கூட்டமைப்பில் போலிக் கணக்குகளைக் காட்டி ரூ.311 கோடி இமாலய வங்கி மோசடி செய்த விவகாரத்தில், சென்னையில் உள்ள ‘தங்கம் ஸ்டீல் லிமிடெட்’ மற்றும் ‘பி.எஸ். கிருஷ்ணமூர்த்தி ஸ்டீல்ஸ்’ ஆகிய இரும்பு நிறுவனங்களுக்குச் சொந்தமான 7 முக்கிய இடங்களில் அமலாக்கத்துறை (ED) அதிகாரிகள் அதிரடிச் சோதனை நடத்தி ரூ.100 கோடி மதிப்புள்ள 43 பினாமி சொத்துக்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

மத்தியப் புலனாய்வுத் துறை (CBI) ஏற்கனவே பதிவு செய்திருந்த இரண்டு தனித்தனி முதல் தகவல் அறிக்கைகளின் (FIR) அடிப்படையில், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் (PMLA) கீழ் சென்னை மண்டல அமலாக்கத்துறை அதிகாரிகள் இந்த அதிரடி விசாரணையைக் கையில் எடுத்துள்ளனர். இந்த மெகா மோசடி விவகாரத்தில் சிபிஐ ஏற்கனவே நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. இரும்பு உற்பத்தி மற்றும் வர்த்தகத்தில் கொடிகட்டிப் பறந்து வந்த இந்நிறுவனங்களின் இயக்குநர்கள், கடந்த 2007 முதல் 2013 வரையிலான காலகட்டத்தில் திட்டமிட்டுப் பாரத ஸ்டேட் வங்கியை ஏமாற்றப் பல விசித்திரமான முறைகேடுகளில் ஈடுபட்டதை அமலாக்கத்துறை தற்போது ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளது.

இந்நிறுவனங்களின் இயக்குநர்கள் தங்களின் உண்மை நிதிநிலையை மறைப்பதற்காக, ஸ்டேட் வங்கிக்கு ஒரு போலி கணக்கு வழக்கையும், நிறுவனங்களின் பதிவாளருக்கு (ROC) வேறொரு கணக்கு வழக்கையும் சமர்ப்பித்து இரட்டை வேடம் போட்டுள்ளனர். இல்லாத போலி குடோன்கள் மற்றும் போலியான லாரி போக்குவரத்து ரசீதுகளைத் தத்ரூபமாகத் தயாரித்து காட்டி, வங்கியினம்பும் வண்ணம் செய்து, தங்களது கடன் மற்றும் கடன் உறுதிப்பத்திர எல்லைகளை (Credit Limits) சட்டவிரோதமாகப் பல மடங்கு உயர்த்தியுள்ளனர். இவ்வாறு போலி நிறுவனங்களின் (Shell Companies) வங்கி கணக்குகள் மூலம் பல அடுக்கு பரிவர்த்தனைகளாக நிதியைத் திசைதிருப்பி, மற்றொரு இரும்பு ஆலையையும், இயக்குநர்களின் சொந்த சொத்துக்களையும் வாங்கி எஸ்பிஐ வங்கி கூட்டமைப்புக்குச் சுமார் 311 கோடி ரூபாய் வரை இமாலய இழப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கடந்த மே 19 அன்று சென்னையில் உள்ள இந்நிறுவனங்களின் இயக்குநர்கள் மற்றும் முக்கிய கூட்டாளிகளின் 7 வளாகங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி ‘மின்னல் வேக’ சோதனையை நடத்தினர். இந்தச் சோதனையில், மோசடிப் பணத்தில் வாங்கிய சொத்துக்களை வங்கி ஜப்தி செய்யாமல் இருக்க, தங்களது தூரத்து உறவினர்கள் மற்றும் பினாமிகளின் பெயர்களில் சொத்துக்களைப் பதுக்கியிருந்தது டக்கெனக் கண்டுபிடிக்கப்பட்டது. இந்தச் சோதனையின் மூலம் ரூ.100 கோடிக்கும் அதிக மதிப்புள்ள 43 அசையா சொத்துக்கள் பினாமி பெயர்களில் இருப்பது துல்லியமாக அடையாளம் காணப்பட்டு முடக்கப்பட்டுள்ளது. மேலும், மோசடி தொடர்பான முக்கிய டிஜிட்டல் ஆதாரங்கள் மற்றும் ரகசிய ஆவணங்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து தங்களது விசாரணையை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளனர்.