வாட்ஸ் ஆப் மூலம் மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு, மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ், உடனடியாக பட்டா உள்ளிட்ட உதவிகளை வழங்கியது பாராட்டை பெற்றுள்ளது.
பாலூர் அடுத்த கரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த 2018ஆம் ஆண்டு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த பொழுது, மழையால் ஏற்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டதால், அவரை பார்த்துக் கொள்ள முடியாத மனைவி தனது குழந்தைகள் இருவரையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனால், வயதான தாயின் அரவணைப்பில் இருந்த சத்தியமூர்த்தி, தனக்கு வீடு இல்லை என்றும், வீட்டு மனைபட்டா வழங்கி, வீடு கட்டி தர மாவட்ட ஆட்சியருக்கு வாட்ஸ் ஆப் மூலம் கடந்த மே 27 அன்று மனு அளித்தார். இதன் அடிப்படையில், சார் ஆட்சியர் நாராயண சர்மா மேற்பார்வையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்ட நிலையில் புதனன்று (மே 29) அதற்கு தீர்வு காணும் வகையில் சத்தியமூர்த்தியை மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் நேரில் சென்று வீட்டு மனை பட்டா வழங்கி, இரண்டு மாதங்களில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் வீடு கட்டி தர வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தரவிட்டார்.
அத்துடன், மின்சார அடுப்பு மற்றும் சமைப்பதற்கு மின்சார குக்கர் ஆகியவற்றையும் வழங்கினார். இதற்கு சத்தியமூர்த்தியும், அவரது தாயும் நன்றி தெரிவித்துள்ளனர். இதனிடையே, மாவட்ட ஆட்சியரின் இந்த துரித நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
