Home Politics “எங்கள் வெற்றி ரீல்ஸ் அல்ல, ரியல்!” – புள்ளிவிவரங்களுடன் திமுக-வைச் சாடிய முதலமைச்சர் விஜய்!

“எங்கள் வெற்றி ரீல்ஸ் அல்ல, ரியல்!” – புள்ளிவிவரங்களுடன் திமுக-வைச் சாடிய முதலமைச்சர் விஜய்!

0

சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் மகத்தான வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது எக்ஸ் (Twitter) தளத்தில் நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய விமர்சனங்களுக்குப் புள்ளிவிவர ரீதியாகப் பதிலடி கொடுத்துள்ளதோடு, திமுக-வின் வாதங்களை ‘அரதப் பழையது’ என விமர்சித்துள்ளார்.

தமிழகச் சட்டமன்றத்தில் இன்று தனது அரசை நிலைநிறுத்திய கையோடு, முதலமைச்சர் விஜய் பொதுமக்களுக்காக ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் நம்பிக்கை வாக்கெடுப்பின் வெற்றி விவரங்கள் மற்றும் எதிர்க்கட்சியினரின் புகார்களுக்கு அவர் அளித்துள்ள விளக்கங்கள் பின்வருமாறு:

மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழக வெற்றிக் கழக அரசு, சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை அதிகாரப்பூர்வமாக நிரூபித்துள்ளது.

ஆதரவு: 144 எம்.எல்.ஏ-க்கள்.

எதிர்ப்பு: 22 எம்.எல்.ஏ-க்கள்.

நடுநிலை: 5 எம்.எல்.ஏ-க்கள்.

சட்டமன்ற நிகழ்வுகள் அனைத்தும் வெளிப்படையாக நேரலை செய்யப்பட்டதைச் சுட்டிக்காட்டிய முதலமைச்சர், எதையும் மறைக்க வேண்டிய அவசியம் தங்களுக்கு இல்லை எனத் தெரிவித்தார்.

திமுக தனிப்பெரும்பான்மை பெறவில்லை என்ற உதயநிதி ஸ்டாலினின் விமர்சனத்திற்கு, தேர்தல் ஆணையத்தின் தரவுகளைக் கொண்டு விஜய் பதிலளித்துள்ளார். தவெக தனித்துப் போட்டியிட்டு 34.92% (ஏறக்குறைய 35%) வாக்குகளைப் பெற்றுள்ளது. ஆனால், திமுக கூட்டணி பலத்துடன் போட்டியிட்டும் அக்கட்சியின் தனிப்பட்ட வாக்கு சதவிகிதம் வெறும் 24.19% மட்டுமே.

தவெக ஒரு கோடியே 72 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளது. இது திமுக பெற்ற வாக்குகளை விட 52 லட்சத்து 97 ஆயிரம் அதிகம். தவெக-வை மக்கள் நிராகரித்துவிட்டதாகக் கூறும் திமுக, அந்த கணக்கின்படி பார்த்தால் 3 கோடியே 68 லட்சம் மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சி எனச் சாடினார். திமுக-வின் ‘டீசண்ட் வெர்ஷன்’ அம்பலமாகிவிட்டதாகக் குறிப்பிட்ட முதலமைச்சர், பல முக்கியக் கருத்துகளை முன்வைத்தார்:

“நாங்கள் எப்போதுமே நாகரிகம் காக்கும் நயத்தகு இயக்கமாக இருப்போம். அறிஞர் அண்ணாவின் கனிவைத் தான் அரசியலில் பின்பற்றுகிறோம். எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை ஏற்று, சில முடிவுகளைத் திருத்திக் கொள்ளும் மனப்பக்குவம் தங்களுக்கு இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், திமுக-வின் வாதங்களைச் ‘சொத்தை வாதங்கள்’ என விமர்சித்தார்.

1999-இல் பாஜக-வுடன் கூட்டணி வைத்துப் பதவி பெற்ற திமுக-வின் வரலாற்றை மக்கள் மறக்கவில்லை என்றும், தவெக எதற்காகவும் எதையும் ‘எக்ஸ்சேஞ்ச்’ செய்துகொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறினார். தவெக அரசை ‘புஷ்பா அரசு’ என ஏளனம் செய்தவர்களுக்குப் பதில் அளித்த அவர், “தோல்வியால் திமுக பொறாமையில் புகை கக்குகிறது. மேஜிக்கல் நம்பர் இல்லை என்று கூறும் திமுக, நாங்கள் செய்யப்போகும் மக்கள் நல மிராக்கிள்களைப் பார்க்கத்தான் போகிறார்கள்” எனச் சவால் விடுத்தார்.

“மதச்சார்பற்ற சமூகநீதிக் கொள்கையில் எமது அரசு உறுதியாக இருக்கும். திமுக-வின் அலறல்களைப் பற்றிக் கவலைப்படாமல் மக்கள் பணியில் ஈடுபடுவோம்” என முதலமைச்சர் விஜய் தனது பதிவை நிறைவு செய்துள்ளார். புள்ளிவிவரங்களுடன் முதல்வர் அளித்துள்ள இந்தப் பதிலடி, தமிழக அரசியலில் புதிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.

CM Vijay’s Hard-Hitting Post: Counters DMK with Election Statistics After Trust Vote Victory.

NO COMMENTS

Exit mobile version