தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய், இம்மாத இறுதியில் மூன்று நாள் பயணமாகத் தலைநகர் டில்லிக்குச் செல்லவுள்ளார். புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் இந்த முதல் அதிகாரப்பூர்வப் பயணத்தில், நாட்டின் முக்கிய அதிகார மையங்களைச் சந்தித்துத் தமிழகத்தின் கோரிக்கைகளை அவர் முன்வைக்க உள்ளார்.
தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், முதல்வர் விஜய் தனது முதல் டில்லி பயணத்தை இம்மாத இறுதியில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார். காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள் மற்றும் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ள நிலையில், மாநிலத்தின் நிதி மற்றும் நிர்வாகத் தேவைகளுக்காக மத்திய அரசின் ஒத்துழைப்பைப் பெறுவதே இந்த விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
புதிய முதல்வர்கள் பதவி ஏற்றவுடன் டில்லி சென்று ஜனாதிபதி மற்றும் பிரதமரைச் சந்திப்பது மரபு என்பதால், இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இப்பயணத்தின் போது ஜனாதிபதி திரௌபதி முர்மு, துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து வாழ்த்துப் பெறுகிறார்.
மத்திய அமைச்சர்களைச் சந்தித்துத் தமிழகத்திற்கான நிதி மற்றும் திட்டங்கள் குறித்துப் பேசுவதுடன், சோனியா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் அவர் சந்திக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் புதிய அரசுக்கு மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு மற்றும் நிர்வாக ரீதியான ஒத்துழைப்பு மிகவும் அவசியமாகக் கருதப்படுகிறது. நிலுவையில் உள்ள மாநிலத் திட்டங்கள் மற்றும் புதிய உள்கட்டமைப்பு வசதிகளுக்கான நிதி ஆதாரங்களை முதல்வர் விஜய் வலியுறுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாநில சுயாட்சியைப் பாதுகாக்கும் அதே வேளையில், மத்திய அரசின் திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்துவதற்கான ஆலோசனைகளும் இந்தச் சந்திப்புகளில் இடம்பெறலாம்.
முதல்வர் விஜய்யின் வருகையை முன்னிட்டு, டில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் பூர்வாங்கப் பணிகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. புதிய முதல்வரை வரவேற்கவும், தங்குமிட வசதிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கும் அதிகாரிகள் தீவிர ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றனர். சட்டமன்றத்தில் தனது பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாராகி வரும் சூழலில், விஜய்யின் இந்த டில்லி பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
தமிழகத்தின் “புதிய அத்தியாயத்தைத்” தொடங்கி வைத்துள்ள முதல்வர் விஜய், மத்திய அரசுடன் இணக்கமான போக்கைக் கடைப்பிடிப்பாரா அல்லது மாநில உரிமைகளுக்காகத் தனது பாணியில் குரல் கொடுப்பாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
