முதலமைச்சர் ஜோசப் விஜய் தனது வீட்டிலிருந்து தலைமைச் செயலகம் செல்லும் போது பொதுமக்களுக்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசல் மற்றும் சிரமங்களைத் தவிர்க்கும் வகையில், சென்னை போக்குவரத்துத் துறை புதிய மற்றும் அதிரடியான தனி வழிப்பாதை (Dedicated Lane) நடைமுறையைக் கொண்டு வந்துள்ளது.
முதலமைச்சர் விஜய் வசித்து வரும் நீலாங்கரை பகுதியிலிருந்து சென்னை ஜார்ஜ் கோட்டையில் உள்ள தலைமைச் செயலகம் வரை ஏறக்குறைய 17 கிலோ மீட்டர் தூரம் உள்ளது. இந்த நீண்ட பாதையில் விஐபி-க்களின் வழக்கமான நடைமுறைப்படி முதலமைச்சரின் கான்வாய் வாகனங்கள் செல்லும் போது, பாதுகாப்பு காரணங்களுக்காக ஒட்டுமொத்தப் போக்குவரத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். சாமானியர்களின் இந்தத் தினசரிப் போக்குவரத்துச் சிரமத்திற்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க முதலமைச்சர் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, போக்குவரத்துத் துறை இந்தச் சிறப்பு ஏற்பாட்டைச் செய்துள்ளது.
புதிய திட்டத்தின்படி, நீலாங்கரையிலிருந்து தலைமைச் செயலகம் வரை முதலமைச்சரின் கான்வாய் வரும் நேரத்தில், சாலைகளின் ஒரு பகுதி முழுவதும் முக்கோணத் தடுப்புகள் (Cone Barricades) கொண்டு தற்காலிகமாகப் பிரிக்கப்படுகிறது. இந்த பிரிக்கப்பட்ட தனிப் பாதையில் முதலமைச்சரின் கார் மற்றும் பாதுகாப்பு வாகனங்கள் எந்தவிதத் தங்குதடையுமின்றி அதிவேகமாகப் பயணிக்கும். அதே நேரத்தில், சாலையின் மற்றொரு பகுதியில் பொதுமக்கள் தங்களின் வாகனங்களில் வழக்கம்போல எந்தவிதத் தடங்கலும் இன்றி பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
பொதுவாக முதலமைச்சர்களின் கான்வாய் சென்றாலே கிலோ மீட்டர் கணக்கில் வாகனங்கள் பல மணி நேரம் ஸ்தம்பித்து நிற்கும் விஐபி கலாச்சாரத்திற்கு மாறாக, தவெக அரசு கொண்டு வந்துள்ள இந்த ‘ரூட் மேப்’ மாற்றம் சென்னை வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.





