“அமைச்சர்களுக்கு எப்போது துறை ஒதுக்கீடு?” – ஆளுநர் ஆர்லேகரைச் சந்தித்துப் பேசிய முதல்வர் செயலர் செந்தில்குமார்!

0
1

தமிழகத்தில் புதிய அரசு பதவியேற்று 6 நாட்களைக் கடந்தும் அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கப்படாததால் எழுந்த விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், முதலமைச்சர் விஜய்யின் முதன்மைச் செயலர் டாக்டர் பி. செந்தில்குமார் ஐஏஎஸ் இன்று ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரைச் சந்தித்துப் பேசியுள்ளார். இந்தச் சந்திப்பின் போது அமைச்சரவை விரிவாக்கம் மற்றும் துறை ஒதுக்கீடு தொடர்பான முக்கியக் கோப்புகள் சமர்ப்பிக்கப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலான புதிய அமைச்சரவை கடந்த மே 10-ஆம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்றுக் கொண்டது. முதலமைச்சருடன் சேர்த்து என். ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, கே.ஏ. செங்கோட்டையன் உள்ளிட்ட 9 பேர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றனர். இருப்பினும், பதவியேற்று 6 நாட்களுக்கு மேலாகியும் புதிய அமைச்சர்களுக்கு இன்னும் துறைகள் ஒதுக்கீடு செய்யப்படாதது அரசியல் வட்டாரத்திலும் ஊடகங்களிலும் பெரும் விவாதப் பொருளாக மாறியிருந்தது. துறை ஒதுக்கீட்டில் நிலவி வந்த இந்தத் முட்டுக்கட்டையை உடைக்கும் வகையில் கோட்டையிலிருந்து இன்று ஆளுநர் மாளிகைக்கு முக்கிய நகர்வு ஒன்று நடந்துள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் முதன்மைச் செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட மூத்த ஐஏஎஸ் அதிகாரி டாக்டர் பி. செந்தில்குமார், இன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகரை நேரில் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது, புதிய அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீட்டுப் பட்டியல் மற்றும் அமைச்சரவையை மேலும் விரிவாக்கம் செய்வது தொடர்பான முக்கிய ஆவணங்களை ஆளுநரின் ஒப்புதலுக்காக அவர் சமர்ப்பித்துள்ளதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அரசு நிர்வாகத்தின் அன்றாடப் பணிகள் மற்றும் கொள்கை முடிவுகள் தொய்வின்றி நடக்க வேண்டுமெனில், அமைச்சர்களுக்கான துறைகள் உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்பதால் இந்தச் சந்திப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன், புதிய அமைச்சர்களுக்கான துறைகள் மற்றும் அமைச்சரவை விரிவாக்கம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று மாலை அல்லது நாளைக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, புதிய அமைச்சர்களின் பதவியேற்பு விழா மற்றும் தவெக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடருக்கான தேதியும் இறுதி செய்யப்படும் எனத் தெரிகிறது. புதிய அமைச்சரவை முழு வடிவம் பெற்று, கோட்டையில் ஃபைல்கள் வேகமாக நகரத் தொடங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.