தண்டையார்பேட்டை காவல் நிலையம் முன் நள்ளிரவில் திருநங்கைகள் திடீர் சாலை மறியல்!

0
2

சென்னை தண்டையார்பேட்டையில் திருநங்கையைத் தாக்கிய வாலிபரை மாஜிஸ்ட்ரேட் ஜாமீனில் விடுவித்ததைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த திருநங்கைகள் காவல் துறையைக் கண்டித்துத் தண்டையார்பேட்டை காவல் நிலையம் முன்பு கைகளைத் தட்டி வினோத முழக்கமிட்டுச் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை தண்டையார்பேட்டை திலகர் நகர் குடிசை மாற்று வாரியக் குடியிருப்புப் பகுதியில், எதிரெதிர் வீடுகளில் வசித்து வரும் திருநங்கைகளுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது குடும்பத்தினருக்கும் இடையே நீண்ட நாட்களாகக் கடுமையான முன்விரோதத் தகராறு நிலவி வந்தது. இந்த மோதலின் உச்சமாக ஏற்கனவே ரவி என்பவர் படுகொலை செய்யப்பட்ட சூழலில், இரு தரப்பிற்கும் இடையேயான பகை அனல் பறந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நேற்று இரவு, ரவியின் மகனான 21 வயது வாலிபர் வெங்கடேசன், சாலையில் நின்று கொண்டிருந்த திருநங்கையிடம் வம்பு இழுத்து ஆபாசமாக அவதூறு பேசியதோடு, அவரை சரமாரியாகத் தாக்கியுள்ளார்.

இதனால் நிலைகுலைந்த திருநங்கைகள் உடனடியாகத் தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்து புகார் அளித்தனர். அதிரடி ஆக்‌ஷனில் இறங்கிய போலீசார் வெங்கடேசனை உடனே கைது செய்து மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். ஆனால், வழக்கை விசாரித்த மாஜிஸ்ட்ரேட், வெங்கடேசனுக்கு உடனடியாக ஜாமீன் (பெயில்) வழங்கி உத்தரவிட்டார். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வெங்கடேசன், எதற்கும் அஞ்சாமல் மீண்டும் திருநங்கைகளின் வீட்டின் அருகே சென்று வம்புக்கு இழுத்து ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

வாலிபர் வெங்கடேசன் உடனடியாக ஜாமீனில் வெளிவந்து மீண்டும் மிரட்டுவதைக் கண்டு கொதித்தெழுந்த திருநங்கைகள், “காவல்துறையினர் பெரும் தொகையை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டுதான் குற்றவாளியை வெளியில் நடமாட விட்டுள்ளனர்” என அதிரடியாகக் குற்றம் சாட்டி, தண்டையார்பேட்டை காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். தொடர்ந்து தண்டையார்பேட்டை வள்ளலார் நெடுஞ்சாலையில் அமர்ந்து கைகளைத் தட்டி முழக்கங்களை எழுப்பி மறியல் போராட்டத்தில் குதித்ததால், அந்த முக்கியச் சாலையில் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பித்தது. நிலைமை கைமீறிப் போவதைக் கண்ட தண்டையார்பேட்டை போலீசார், உடனடியாக விரைந்து சென்று வெங்கடேசனை மீண்டும் அதிரடியாகக் கைது செய்து காவல் நிலையத்திற்கு இழுத்து வந்தனர். மேலும், இரு தரப்பினர் மீதும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, திருநங்கைகள் தங்களது சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.