கள்ளத்தொடர்பு… இளைஞர் கொலை.. 7 பேர் கைது!

0
1

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அருகே கள்ளத்தொடர்பு பிரச்னையில் இளைஞர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சூனாம்பேடு அடுத்த தாமரைக்கேணி கிராமத்தைச் சேர்ந்த மணி என்பவரின் மகன் விஜய் (31), கொத்தனாராக வேலை செய்து வந்தார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நாளடைவில் இந்த பழக்கம் கள்ளத்தொடர்பாக மாறியதாக தெரிகிறது.

இந்த விவகாரம் அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரிய வந்த நிலையில், பெண்ணின் கணவர் மற்றும் குடும்பத்தினர் இருவரையும் பலமுறை எச்சரித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், தொடர்பை நிறுத்த மறுத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் விஜய் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றதாக கூறப்படுகிறது. இதை அறிந்த பெண்ணின் குடும்பத்தினர் அங்கு சென்று விஜய்யை தாக்கியுள்ளனர். பின்னர் கூரிய ஆயுதத்தால் அவரது காலில் கடுமையாக வெட்டியதுடன், உயிரிழக்கும் வகையில் தாக்குதல் நடத்தியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

பின்னர், அவரது உடலை கிராமம் அருகிலுள்ள புதர்பகுதியில் வீசி சென்றதாக கூறப்படுகிறது. விஜய் வீடு திரும்பாததால் உறவினர்கள் தேடிய நிலையில், மறுநாள் காலை புதரில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற Tamil Nadu Police அதிகாரிகள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இந்த வழக்கில் பெண்ணின் தந்தை, கணவர் உள்ளிட்ட 7 பேரை கைது செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.