சினிமாக்காரர்களைப் பார்க்கும் முதல்வர் எங்களை ஏன் பார்க்கல? தூய்மைப் பணியாளர்கள் முற்றுகை!

0
1

தூய்மைப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும், பெண் பணியாளர்களுக்குக் கழிப்பறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பாரிமுனையில் உள்ள சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உழைப்போர் உரிமை இயக்கம் சார்பில் இன்று பிரம்மாண்ட கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உழைப்போர் உரிமை இயக்கத்தின் தலைவர் கு. பாரதி தலைமையில் நடைபெற்ற இந்த அதிரடிப் போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் திரண்டு தங்களது உரிமைகளுக்காக விண்ணதிரக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தின் போது செய்தியாளர்களைச் சந்தித்த இயக்கத்தின் தலைவர் கு. பாரதி, புதிய தவெக அரசு மற்றும் காவல்துறையின் அராஜகப் போக்குகளுக்கு எதிராகத் தனது கடுமையான கண்டனக் கணைகளைத் தொடுத்தார்.

அப்போது பேசிய அவர், “புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு, ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று தேர்தல் மேடைகளில் வாக்குறுதி அளித்தது. ஆனால், இப்போது பணி நிரந்தரம் கோரிப் போராடும் எங்களை மதிக்காமல் கால அவகாசம் கேட்கிறார்கள். மாநிலத்தில் டாஸ்மாக் கடைகளை மூடவோ அல்லது தவெக எம்.எல்.ஏ-க்கள் தங்களின் ஜோதிடர்களை நியமிக்கவோ இந்த அரசுக்குக் கால அவகாசம் தேவைப்பட்டதா? தேர்தலின் போது கூட்டணி அமைக்க மட்டும் இவர்களுக்குக் கால அவகாசம் தேவைப்பட்டதா? அப்படி இருக்கையில், ஏழைத் தொழிலாளர்களாகிய எங்களுக்கு மட்டும் கால அவகாசம் கேட்பது என்ன நியாயம்? எங்களை அழைத்துச் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையரும், அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவும் எவ்வளவு கால அவகாசம் தேவை என்பதைத் துல்லியமாகக் குறிப்பிடாமல் வெறும் மழுப்பலான பதிலையே தந்தனர்” என்று கொந்தளித்தார்.

மேலும் காவல்துறையின் அடக்குமுறைகள் குறித்துப் பேசிய பாரதி, “போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் தொழிலாளர்களை நோக்கிப் போலீசார் மீசையை முறுக்கிக்கொண்டு மிரட்டும் தொனியில் பேசுவது அநாகரிகமானது; திட்டமிட்டு எங்களது அமைதியான ஆர்ப்பாட்டத்தில் கலவரத்தை ஏற்படுத்தக் காவல்துறை முயல்கிறது. இதற்கு முன்பு இதே பகுதியில் நாங்கள் பலமுறை போராடியபோது முந்தைய ஆட்சியில் காவல்துறை எங்களைச் சீண்டவில்லை; ஆனால், இவர்கள் ஆட்சிக்கு வந்த உடனே எங்களை மிரட்டித் தொந்தரவு செய்கிறார்கள். இது மேலிடத்து உத்தரவு என்றால், அராஜகம் செய்யும் அதிகாரிகள் மீது நாங்களும் சளைக்காமல் வழக்குத் தொடுப்போம். யூடியூபர் சவுக்கு சங்கர் மீது போடப்பட்ட குண்டாஸ் சட்டத்தை அவசர அவசரமாக ரத்து செய்யும் இந்த அரசு, எங்களது வாழ்வாதாரப் போராட்டத்தின் போது போடப்பட்ட 40-க்கும் மேற்பட்ட பொய் வழக்குகளை இன்னும் ரத்து செய்ய மறுப்பது ஏன்? பெரும் முதலாளிகளையும், சினிமாகாரர்களையும் ஓடி ஓடிப் பார்க்கும் முதலமைச்சர் விஜய், உழைக்கும் வர்க்கமான எங்களையும் நேரில் அழைத்து உடனடியாகப் பேச வேண்டும்; இல்லையெனில் லட்சக்கணக்கானோரிடம் கையெழுத்து பெற்று வரும் ஜூன் 20-ஆம் தேதி கோட்டையை நோக்கிப் பிரம்மாண்ட பேரணி நடத்துவோம்” என்று தவெக அரசுக்கு அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளார்.