தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து சென்னை விமான நிலையத்தில் வந்த பயணியிடமிருந்து ரூ.10 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கேரளாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சுற்றுலா விசாவில் தாய்லாந்து சென்று திரும்பியபோது, அவரது செயல்பாடுகளில் சந்தேகம் ஏற்பட்டதால் அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர்.
அவரது சூட்கேஸில் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் மற்றும் சாக்லேட் பார்சல்களுக்கு இடையே மறைத்து வைக்கப்பட்டிருந்த 10 பிளாஸ்டிக் பொதிகளில் 10 கிலோ 114 கிராம் உயர்ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. சர்வதேச சந்தையில் இதன் மதிப்பு சுமார் ரூ.10 கோடி என கூறப்படுகிறது.
விசாரணையில், பாங்காக் விமான நிலையத்தில் மர்ம நபர்கள் இந்த பார்சல்களை கொடுத்து, சென்னை வந்தபின் மற்றொருவரிடம் ஒப்படைத்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என கூறியதாக கைது செய்யப்பட்ட இளைஞர் தெரிவித்தார். இதையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும், சென்னை விமான நிலையத்தில் இந்த போதைப்பொருளை பெற காத்திருந்த நபர்கள் யார் என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சென்னை விமான நிலைய பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
