செங்கல்பட்டி பாமக நிர்வாகி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 46). செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பாமக நகர செயலாளரான இவர் செங்கல்பட்டு மணிகூண்டு அருகே பூ வியாபாரம் செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு 10 மணியளவில் வழக்கம் போல வியாபாரம் முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல முயன்றபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சரமாரியாக வெட்டியது.
இதில் பலத்த காயமடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு டவுன் போலீசார் நாகராஜை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அவர் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து மருத்துவமனை முன்பு ஏராளமான பாமகவினர் குவிந்தனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள், பாமக நிர்வாகி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பாமக பிரமுகரான நாகராஜ் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கொலைக்கு முன் விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதாவது காரணமா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே வெடி குண்டு வீசி, அரிவாளால் வெட்டியும் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று பாமக நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் செங்கல்பட்டு பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.