Home செங்கல்பட்டு தட்கல் திட்டத்தில் ரூ.2.90 கோடி செலுத்தியும் மின் இணைப்பு இல்லை: செங்கல்பட்டு விவசாயிகள் வேதனை

தட்கல் திட்டத்தில் ரூ.2.90 கோடி செலுத்தியும் மின் இணைப்பு இல்லை: செங்கல்பட்டு விவசாயிகள் வேதனை

0

செங்கல்பட்டு மாவட்டத்தில் தட்கல் திட்டத்தின் கீழ் விவசாய மின் இணைப்புக்காக முன்பணம் செலுத்திய 116 விவசாயிகளுக்கு ஆறு மாதங்களாக மின் இணைப்பு வழங்கப்படாததால் கடும் அதிருப்தி நிலவுகிறது.

செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், வண்டலூர், தாம்பரம் மற்றும் பல்லாவரம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1.67 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக மதுராந்தகம், செய்யூர் மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளில் நெல் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.

தமிழகத்தில் 1990 முதல் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டு வரும் நிலையில், செங்கல்பட்டு மின்பகிர்மான கட்டுப்பாட்டில் கடந்த ஐந்து ஆண்டுகளில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இலவச மின் இணைப்புக்காக விண்ணப்பித்துள்ளனர்.

2025-26 ஆம் ஆண்டிற்கான விரைவு தட்கல் திட்டத்தின் கீழ் மின் இணைப்பு பெற கடந்த டிசம்பர் மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த திட்டத்தில் செங்கல்பட்டு மின்பகிர்மானத்துக்குட்பட்ட 116 விவசாயிகள் தலா ரூ.2.50 லட்சம் வீதம் முன்பணம் செலுத்தியுள்ளனர். இதன் மூலம் மொத்தமாக ரூ.2.90 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு கோட்டத்தில் 36 பேர், மதுராந்தகம் கோட்டத்தில் 42 பேர், அச்சிறுப்பாக்கம் கோட்டத்தில் 31 பேர் மற்றும் மறைமலைநகர் கோட்டத்தில் 7 பேர் என மொத்தம் 116 விவசாயிகள் மின் இணைப்புக்காக காத்திருக்கின்றனர். ஆனால் கடந்த ஆறு மாதங்களாக அவர்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படவில்லை.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மின்கம்பங்கள், மின்கம்பிகள் உள்ளிட்ட தளவாடப் பொருட்களை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவிப்பதாக கூறினர். தேவையான பொருட்கள் கிடைத்தவுடன் இணைப்பு வழங்கப்படும் என பொறியாளர்கள் உறுதியளித்ததாகவும் தெரிவித்தனர்.

ஆனால் ஆறு மாதங்களாக எந்த முன்னேற்றமும் இல்லாததால் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், உடனடியாக மின் இணைப்புகளை வழங்க தமிழக அரசு மற்றும் மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version