செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சுற்றித்திரியும் கால்நடைகள் மற்றும் தெருநாய்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் S. Malathi Helen எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் காரணமாக அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழ்வதாகவும், விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை சேதப்படுத்துவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, கால்நடை உரிமையாளர்கள் தங்களது மாடுகளை வீடுகளில் கட்டி பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பை மீறி சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் பிடிபட்டால், அருகிலுள்ள கால்நடை பட்டிகளில் அடைக்கப்படும். மேலும், பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் நாள் ஒன்றுக்கு ரூ.2,000 அபராதம் விதிக்கப்படுவதுடன், உரிமையாளர்கள் மீது காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழு நாட்களுக்குள் உரிமை கோரப்படாத கால்நடைகள் பொது ஏலத்தில் விடப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், தெருநாய்கள் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் நோக்கில் தாம்பரம் மற்றும் மறைமலைநகர் மாநகராட்சிகள் மூலம் கருத்தடை மற்றும் வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. கடந்த மூன்று மாதங்களில் நந்திவரம் மற்றும் திருக்கழுக்குன்றம் பகுதிகளில் 97 நாய்களுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அச்சிறுப்பாக்கம் ஒன்றியத்தின் பெரும்பேர்கண்டிகை கிராமத்தில் நாய்களுக்கான காப்பகம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது. தெருநாய்கள் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தால் உடனடியாக நகராட்சி, பேரூராட்சி அல்லது ஊராட்சி நிர்வாகத்துக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
