செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே நேற்று (22.05.2026) போக்குவரத்து காவல் ஆய்வாளர் ஆனந்தராஜ் மற்றும் உதவி ஆய்வாளர் அஜித்குமார் தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை போலீசார் நிறுத்தி விசாரணை நடத்தினர்.
வாகனத்தின் பதிவு எண்ணை ஆய்வு செய்தபோது, அது திருடப்பட்ட இருசக்கர வாகனம் என்பது தெரியவந்தது. இதையடுத்து வாகனத்தை ஓட்டி வந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், அந்த வாகனம் எங்கு திருடப்பட்டது, இதில் தொடர்புடையவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். செங்கல்பட்டு பகுதியில் அண்மைக்காலமாக வாகன திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால், போலீசார் பல்வேறு இடங்களில் தீவிர வாகன சோதனைகளை தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.
பொதுமக்கள் தங்களது வாகனங்களை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி, உரிய பாதுகாப்பு வசதிகளை பயன்படுத்த வேண்டும் என்றும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.
