ஊருக்குள் நுழைந்த புள்ளிமான்: தெருநாய்கள் கடித்ததில் காயம், சாக்கடையில் இருந்து தீயணைப்புத் துறையினர் மீட்பு!

0
4

செங்கல்பட்டு சக்தி நகர் குடியிருப்பு பகுதிக்குள் உணவும் தண்ணீரும் தேடி நுழைந்த புள்ளிமான் குட்டி ஒன்றை தெருநாய்கள் கடித்துக் குதறியுள்ளன. நாய்களிடம் இருந்து தப்பிக்கச் சாக்கடைக்குள் பதுங்கிய அந்த மான் குட்டியை, அப்பகுதி மக்களின் தகவலின் பேரில் வந்த தீயணைப்புத் துறையினர் பத்திரமாக மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

செங்கல்பட்டு திருப்போரூர் கூட்டு ரோடு அருகே உள்ள வனப்பகுதிகள் மற்றும் திருப்போரூர் சாலையின் இருபுறமும் உள்ள காடுகளில் மயில்கள் உள்ளிட்ட பறவை இனங்களும், ஏராளமான புள்ளிமான்களும் வசித்து வருகின்றன. தற்போது கடுமையான கோடைக் காலம் நிலவி வருவதால், வனப்பகுதிக்குள் வனவிலங்குகளுக்குக் குடிப்பதற்குக் குடிநீரோ அல்லது போதுமான உணவோ கிடைப்பதில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாக, அங்குள்ள மயில்கள் காட்டை விட்டு வெளியேறி மின்சாரக் கம்பிகளில் சிக்குவதும், புள்ளிமான்கள் தண்ணீரைத் தேடிக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் நுழைவதும் தொடர்ந்து வருகின்றன.

இந்தச் சூழ்நிலையில், வனப்பகுதியில் இருந்து வெளியேறிய புள்ளிமான் குட்டி ஒன்று செங்கல்பட்டு சக்தி நகர் குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்துள்ளது. மானைக் கண்டதும் அப்பகுதியில் இருந்த தெருநாய்கள் அதனைத் துரத்திக் கடிக்கத் தொடங்கியுள்ளன. நாய்களிடம் இருந்து தப்பிப்பதற்காக அந்த மான் குட்டி அருகில் இருந்த சாக்கடை வாய்க்காலுக்குள் புகுந்து பதுங்கிக் கொண்டது. இதனை நேரில் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், உடனடியாக செங்கல்பட்டு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், சாக்கடைக்குள் பதுங்கியிருந்த புள்ளிமானை லாவகமாகப் பிடித்து வெளியே மீட்டனர். தெருநாய்கள் கடித்ததில் மான் குட்டியின் கழுத்துப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்து கொண்டிருந்தது. தீயணைப்பு வீரர்கள் உடனடியாகத் துணியைக் கொண்டு காயம்பட்ட மானின் கழுத்தில் கட்டிக் ரத்தப்போக்கை ஓரளவிற்குக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

அதனைத் தொடர்ந்து, மீட்கப்பட்ட புள்ளிமான் குட்டி உடனடியாக கால்நடை மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது. அங்கு மான் குட்டிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சாக்கடையில் இருந்து மீட்கப்பட்ட மான் குட்டியைப் பார்ப்பதற்காக அப்பகுதியில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வனவிலங்குகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறையினர் காடுகளுக்குள் தண்ணீர் தொட்டிகளை அமைக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.